திருவிதாங்கூர் தேவசம் போர்டு மே 18 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில் வளாகங்களில் ஆர்எஸ்எஸ் சகாக்கள் அமைப்பால் ஒருங்கிணைக்கப்படும் ஊர்வலங்கள் அல்லது பிற செயல்பாடுகளைச் செய்ய அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் பின்பற்றாத அதிகாரிகள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த சுற்றறிக்கையில், சங் பரிவார் அமைப்பினர் ஆயுதப் பயிற்சி மேற்கொள்ள கோவில் சொத்துகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த 2021 ஆம் ஆண்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேவசம் போர்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் கோவில் வளாகங்களில் மேற்கொள்ளப்படும் ஆயுதப் பயிற்சிக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. அப்போதைய தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது கோவில்களைத் தங்களது ஆயுதக்கிடங்காக மாற்ற முயற்சி செய்வதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன என்று குற்றம் சாட்டி இருந்தார்.
பின் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை குறித்து கூறிய தேவசம் போர்டு அதிகாரி ஒருவர், “கோவில் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது செயல்படுவதை தடுப்பதற்கு இந்த முறை மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.