தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசும்போது, "ஏழு உட்பிரிவுகளை உடைய சாதிகளை, 'தேவேந்திர குல வேளாளர்' என்ற பொதுவான பெயரில் அறிவிக்கலாம் என்றும் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகவும், இதற்கென்று தனிக்குழு அமைத்து அவர்கள் கொடுத்த அறிக்கையின் படி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்" தெரிவித்தார்.
இந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் வ.உ.சி பேரமைப்பினா் போராட்டத்தை நடத்தினார்கள். இதில், ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கிய சாதிகளுக்கு 'தேவேந்திர குல வேளாளர்' எனப் பொதுப் பெயரிட மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ள முதலமைச்சரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதன் ஒருபகுதியாக திருச்சியில் வ.உ.சி பேரவையினர், திருச்சி அரியமங்களம், பால்பண்ணை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். சுமார், அரைமணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இந்தச் சாலை மறியலில் ஈடுபட்ட 50 -க்கும் மேற்பட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.