
முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவாக மெரினா கடல் பகுதியில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாம் தமிழர், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் ஆகிய இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நாம் தமிழர் சார்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். சமூக ஆர்வலர் முகிலன் கலந்து கொண்டார். முதலில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பாக பேசிய சங்கர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சீமான், “''கடல் பகுதியில் பேனா சின்னம் வைப்பதால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும். உங்களுக்கு எதைப் பற்றிய அக்கறை இருக்கிறது? பேனா சின்னம் வச்சுப் பாருங்க.. ஒருநாள் நான் வந்து உடைக்கலன்னா பாருங்க.. யார் கேட்டா பேனா சின்னம்? ஏன், பேனாவை கடலுக்குள்ள தான் வைக்க வேண்டுமா? அண்ணா அறிவாலயத்தின் முன் வையுங்கள்; நினைவிடம் கட்டி உள்ளீர்களே, அங்கே வையுங்கள் கடலுக்குள்ளே தான் வைப்பீர்களா? பள்ளிக்கூடத்தைச் சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது. இதனால் 13 மீன்பிடி கிராமங்கள் பாதிக்கப்படும். என் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அனைத்து மீனவர் சங்கம், அகில இந்திய சங்கம் என வைத்துக்கொண்டு இதனால் ஒன்றும் பாதிப்பு இல்லை என்று சொல்லக்கூடாது'' என்று பேசியிருந்தார்.
சீமானின் இந்த பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜாவும் தனது கண்டத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில், “கலைஞர் எனும் ஆலமரத்தின் அடியில் பிழைத்து வந்த புழுக்களெல்லாம் அவரது நினைவை சீண்டிப் பார்க்க நினைக்கின்றன. கலைஞர் நினைவிடத்தின் நிழல் மீது கை வைத்தாலும், அப்புறம்... இருக்காது. மீண்டும் சொல்கிறேன், நாகரீக அரசியலெல்லாம் இதுகளிடம் சரி வராது” எனப் பதிவிட்டுள்ளார்.