Skip to main content

பர்னாலாவை பார்த்து திருந்துங்க; ஆளுநரை விமர்சித்த ச.அ.பெருநற்கிள்ளி!

Published on 21/10/2024 | Edited on 21/10/2024
 RN Ravi | MK Stalin | DMK

டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி மாத நிறைவு கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வி.சி.க. தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், உள்ளிட்ட பலர் ஆளுநரை கண்டித்து பேசி இருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி நக்கீரனுக்கு அளித்த நேர்காணலில் பேசியபோது, “ஆளுநர் செய்திருப்பது மன்னிக்க முடியாத தவறு. தமிழ்நாட்டின் முதலைச்சராக கலைஞர் இருந்தபோது ஈழ விடுதலைப் போரை காரணம் காட்டி அப்போது ஆட்சி கலைக்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டில் பஞ்சாப்பை சேர்ந்த சுர்ஜித் சிங் பர்னாலா என்பவர் ஆளுநராக இருந்தார். ஆட்சி கலைக்கப்படுவதற்காக மத்திய அரசு அப்போது பர்னாலாவை அழைத்து ஒப்புதல் கேட்டபோது, ஆளுநர் தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடைபெறுவதாக கூறி டெல்லிக்குச் செல்லவில்லை. ஆனால் ஆளுநரின் ஒப்புதலின்றி அப்போது ஆட்சி கலைக்கப்பட்டது. இதற்கு கலைஞர், தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு பர்னாலா மருந்தாற்றியிருக்கிறார் என்று பாராட்டியிருந்தார். 

இதுபோன்ற வரவலாற்று நிகழ்வை கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், தான் ஆளுநராக பதிவியேற்ற நாளிலிருந்து திராவிடக் கொள்கைக்கும் தமிழுக்கும் எதிராகவே ஆளுநர் ஆர்.என். ரவி செயல்பட்டு வருகிறார். இதுநாள் வரை அவர் டெல்லிக்கு சென்று பிரதமரிடம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கோரிக்கை வைத்தது இல்லை. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்த ஆளுநர்கள் அனைவரும் அரசியலில் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் ஆர்.என். ரவி ஆர்.எஸ்.எஸ்.-ல் பயிற்சி பெற்றவராக இருக்கிறார். இன்னும் ஆயிரம் ஆர்.என் ரவி வந்தாலும் ஆரியத்திற்கு எதிராக இருக்கக்கூடிய திராவிட சித்தாந்தத்தை ஒழிக்க முடியாது. மீதமிருக்கும்  ஆளுநர் பதவி காலத்தை ஆர்.என்.ரவி நிறைவு படுத்திக்கொண்டு ஆரோக்கியமாக சென்றால் நல்லது. இல்லையென்றால் பாடம் கற்பிக்கப்பட்டு பாதுகாப்பாக அவரை அனுப்பி வைக்கப்படுவார்” என்றார்.
 

சார்ந்த செய்திகள்