தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளைச் செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்துள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையொட்டி விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதோடு, உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. மேலும் அவரது கட்சியின் முதல் மாநாட்டை அடுத்த மாதம் திருச்சியில் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது. இதனையடுத்து இந்த மாநாடானது அடுத்த மாதம் 22 ஆம் தேதி (22.09.2024) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியில் வாகை மலர் இடம் பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மஞ்சள் மற்றும் சிவப்பு என இரண்டு வண்ண கொடியின் மத்தியில் இந்த வாகை மலர் இடம்பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வரலாற்றின் சங்க காலங்களில் போரில் வெற்றி பெறும் அரசர்களுக்கு வெற்றி பெற்றதற்கான அடையாளமாக வாகை மலர் சூடப்படுவது வழக்கம் ஆகும். மேலும் வாகை என்றால் வெற்றி. விஜய் என்றால் வெற்றி என்ற அடிப்படையில் இந்த மலர் கட்சிக் கொடியில் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. எனவே விரைவில் கொடி அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.