
ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுக்குழு மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்திருந்த தீர்ப்பு அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது காரணமாக ஓபிஎஸ் தரப்பும், எடப்பாடி தரப்பும் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன.
பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் யார் என்பதை அதிமுகவின் அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வேட்பாளரை தேர்வு செய்து அதற்கான சுற்றறிக்கை படிவம் அதிமுகவின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்த பொதுக்குழு உறுப்பினர்களில் இபிஎஸ் தரப்பினர் 90%க்கும் மேல் என்பதால் இபிஎஸ் முன் மொழிந்த தென்னரசு தான் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக ஓபிஎஸ் தரப்பினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பொதுக்குழு உறுப்பினர்கள் யாருக்கு கூடுதலாக வாக்களிக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்து முடிவு எடுக்க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கட்டுப்பட்டவர். அப்படியிருக்க ஒருவரை மட்டும் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக அறிவித்தும் அவரை ஆதரிக்கிறீர்களா மறுக்கிறீர்களா என்று கேட்டும் கடிதம் அனுப்பி இருந்தது வேட்பாளர் தேர்வு முறையாகாது. அது பொது வாக்கெடுப்பு முறையாகும். வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஒரு வேட்பாளரை அறிவித்து அவருக்கு பொது வாக்கெடுப்பு நடத்துவது என்பது உச்சநீதிமன்றமே எதிர்பார்க்காத ஒன்று என்றால் மிகையாகாது” எனக் கூறியிருந்தனர்.
இந்நிலையில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களை டெல்லி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க இன்று காலை டெல்லி புறப்பட்டனர். இந்நிலையில் அதிமுக பன்னீர்செல்வம் தரப்போ, தமிழ்மகன் உசேன் நெறிமுறை தவறி ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி இருந்த நிலையில் பன்னீர்செல்வம் தரப்பின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது குறித்த கேள்வி அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.