இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்த அதிகரித்துக் கொண்டே வருகிறது. மன்மோகன் சிங், ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் உள்ளிட்ட அரசியல் கட்சியினருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் யெச்சூரி, கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 34. மகன் உயிரிழந்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், "கடினமான நேரத்தில் எங்களுக்கு நம்பிக்கை அளித்த அனைவருக்கும், என் மகனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கும், எங்களோடு துணை நின்ற பலருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
ஆசிஷ் யெச்சூரியின் மரணத்திற்கு பிரதமர் மோடி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆசிஷ் யெச்சூரி பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிஷ் யெச்சூரி மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், “மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மகனை இழந்து வாடும் யெச்சூரிக்கு, இந்த சோகத்தை தாங்கும் வலிமையை இயற்கை வழங்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.