திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா நேற்று (02.01.2024) நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்கும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 38வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருச்சி வந்தார். அதன்படி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதற்கிடையே, பிரதமரை விமான நிலையத்தில் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து நேற்று (02-01-24) பிரதமரை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், இன்று (03-01-24) ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது பிரதமருடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன். அதன்படி, அவரை சந்தித்து வாழ்த்து கடிதம் மட்டுமே அளித்தேன். மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் டெல்லிக்கு சென்று அவரை சந்திப்பேன்.
எடப்பாடி பழனிசாமி தொடர்பான ரகசியங்களை பொது வெளியில் இப்போது சொல்ல முடியாது. காலம் வரும் போது அதை வெளியிடுவேன். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். அதிமுகவை மீட்டெடுப்பதற்கான போராட்டம் தொடரும். டி.டி.வி தினகரனுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை நாங்கள் சந்திப்போம். சசிகலா விரும்பினால் அவரையும் சந்திப்பேன். பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுவதற்கான நல்ல சூழல் உருவாகியுள்ளது. பழனிசாமி ஆட்சியில் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள உண்மை குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” என்று கூறினார்.