அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திவாகரன் மன்னார்குடியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவித்து கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை கொடியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன்,
ஜெயலலிதா விரும்பாத பாஜக, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்த காரணத்தினால் தான் தேர்தல்களில் அதிமுக மிக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியால் கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியில் கூட அதிமுகவை வெற்றி பெற வைக்க முடியவில்லை. தோல்வியை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும்.
அதிமுக வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. தினகரன் ஒரு மூட்டைப் பூச்சி போல் இருந்து கொண்டு தனது சுயநலத்திற்காக தமிழக அரசியல் குட்டையை குழப்பி கொண்டிருந்தார். இந்த தேர்தலில் தினகரன் என்ற மூட்டைப் பூச்சியை மக்கள் நசுக்கி எறிந்து விட்டனர். அவரை நம்பி சென்ற அப்பாவி தொண்டர்களை, தலைவர்களை தேர்தலில் பலிக்கடாவாக ஆக்கி அவர்களை நட்டாற்றில் விட்டு விட்டார். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் வேண்டுமென ராஜன் செல்லப்பா கூறியிருப்பது சரியான கருத்து. அவரை போல பல எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மனக்கசப்பில் உள்ளனர்.
4 அமைச்சர்கள் தான் தமிழக அரசை ஆட்டி படைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒற்றை தலைமை பிரச்னை குறித்து விவாதிக்க உடனடியாக பொதுக்குழுவை கூட்டி அதில் தொண்டர்களின் கருத்தை உள்வாங்கி முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு திவாகரன் கூறினார்.