ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய அலுவல் தொடங்கியதும், ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராகுல்காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை எனவும், ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்தும், சட்டப்பேரவையிலிருந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே ராகுல் காந்தி எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா, காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.