தொழிற்சங்கம் சார்பில் புதுச்சேரியில் பொதுவேலைநிறுத்தம் புதன்கிழமை 08.01.2020ல் நடைபெற்றது. இதனால் பேருந்துகள், டெம்போக்கள், ஆட்டோக்கள், ஓடவில்லை. பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்தும் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டம் புதுச்சேரியிலும் நடைபெறும் என அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. அதன்படி பொது வேலை நிறுத்தம் 08.01.2020 காலை 6 மணிக்கு தொடங்கியது. அதன் காரணமாக பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோ, டெம்போக்கள் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன.
திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல் பெரிய மார்க்கெட், நேரு வீதி, காந்தி வீதி, காமராஜர் வீதி ஆகிய பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டன.
11 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பொதுவேலை நிறுத்தத்தை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு கருதி 700-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேசமயம் கடலூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. கடைகள் திறந்திருந்தன. பேருந்துகள் இயங்கின. கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட ஊர்களில் சாலை மறியல் செய்த போராட்டக்குழுவினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.