வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என்று உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தலைவரும் உத்திரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசும்போது, "அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடையும். இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சி செய்வோம் என்று பாஜக கூறுகிறது. அக்கட்சியின் தலைவர் 50 ஆண்டுகள் ஆட்சி செய்வோம் என்று கூறுகிறார். ஆனால் பாஜக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. லண்டன் , நியூயார்க் போன்ற இடங்களில் இருந்து உத்தரப் பிரேதேசத்துக்கு முதலீடுகளை கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மாவட்டங்களில் இருந்து முதலீடுகளை கொண்டு வருகிறார்கள். அவர்கள் யாரை முட்டாளாக்குகிறார்கள்?.
பாஜகவின் தேசிய தலைவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள இரண்டு மருத்துவ கல்லூரிக்கு வருகை தர வேண்டும். அப்படி வந்தால் எத்தனை இடங்களில் அவர்கள் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். போலீஸ் விசாரணையின் போது இறந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டும். ஆனாலும் பாஜக இதிலும் பாரபட்சம் காட்டுகிறது" என்று பேசினார்.