பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் சென்னை விமான நிலைய சாலையில் கையில் பதாகைகளுடன் காத்திருந்தனர். சென்னை விமான நிலையம் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து அமித்ஷா, எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு செல்லும் வழியில் அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் ஆடல் பாடலுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று மாலை 4 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடக்குவிருக்கும் அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். விழாவில் ரூபாய் 67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு காணொளி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
முன்னதாக நேற்று எம்.ஆர்.சி. நகர் ஓட்டல் லீலா பேலஸிலிருந்து, கலைவாணர் அரங்கம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எப்படி வரவேற்பது போக்குவரத்தை எப்படி சரி செய்வது போன்றவற்றை காவல்துறையினர் ஒத்திகை செய்து பார்த்தனர். மேலும் அமித்ஷா வருகையொட்டி சென்னை கலைவாணர் அரங்கிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.