Skip to main content

“அண்ணாமலையின் வீட்டு வாடகை மட்டும்...” - முன்னாள் பாஜக நிர்வாகி சரமாரி கேள்வி

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

"Annamalai's house rent only..." barrage of questions from former BJP executive

 

காவல்துறையில் இருந்தபோது சம்பாதித்து சேர்த்து வைத்த பணத்தை தேர்தலில் செலவு செய்து தேர்தலுக்கு பின் நான் கடனாளியாக இருக்கிறேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

 

ஓரிரு தினங்கள் முன் சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, பாஜக தமிழ்நாட்டில் வளர திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று பேசியதாகச் சொல்லப்படுகிறது. அவர் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. தனித்து நிற்பது தொடர்பான பேச்சுக்கு வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி, பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் காவல்துறையில் 9 ஆண்டுகள் சம்பாதித்த அத்தனை பணமும் அவரக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது. அவையெல்லாம் குருவி சேர்ப்பது போல் நான் சிறுக சிறுக சேர்த்து வைத்தது. டீசல் போடனும், பெட்ரோல் போடனும் என்று எல்லாம் செலவாகிவிட்டது. எலெக்‌ஷன் முடிந்தவுடன் நான் சத்தியமாக கடனாளியாகத் தான் இருக்கிறேன். இந்த நேரத்தில் மறுபடியும் ஒரு பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் இந்திய அரசியல் களத்தில் ஒரு பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க 80 கோடி ரூபாயிலிருந்து 120 கோடி ரூபாய் வரை செலவு பண்ண வேண்டும் என்பது பொதுவான கணக்கு. இதை செய்து விட்டு இங்கு கிளீன் பாலிடிக்ஸ் என்று பேச முடியாது” எனக் கூறி இருந்தார். 

 

இந்நிலையில், அண்ணாமலை கூறியதற்கு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், “காவல்துறை அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்தேன். தற்போது கடன்காரனாக இருக்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார். தற்போது இருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.5 லட்ச ரூபாய்; நடத்தும் வார்ரூம் யூடியூபர்கள் செலவு மாதம் 8 லட்சம்; யூடியூபர் ஒருவருக்கு மட்டும் 2 லட்சம்; இப்படி உச்ச ஆடம்பரத்தில் வாழும் அண்ணாமலை அருகே யாரோ வைத்துக் கொண்டு சொல்வது பணம் இல்லாத அரசியல் வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பாஜகவின் அதிகார வெறி இதன் மூலம் தெரிகிறது''-செல்வப்பெருந்தகை பேட்டி

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
"BJP's hunger for power is evident through this" - Selvaperunthakai interview

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் கடந்த 17.06.2024 அன்று காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்த சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''உபகரணங்கள் வாங்குவதற்கு பதிலாக, பாதுகாப்பிற்கு செலவு செய்வதற்கு பதிலாக, ஆடம்பர வீடுகள் கட்டுவதும், சுற்றுலா மாளிகை கட்டுவதும், அந்தச் சுற்றுலா மாளிகை பங்களா வீடுகளுக்கு விலை உயர்ந்த பர்னிச்சர்களை வாங்குவதிலும் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள இடத்தில் இவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு சிஏஜி அறிக்கை சொல்கிறது. ஆனால் மெத்தனபோக்கோடு இப்படி விபத்துகளை தொடர்ந்து பாஜக அரசு அனுமதித்து இருக்கிறது.

காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகவும், ரயில்வேதுறை அமைச்சராகவும் இருந்த ஓ.வி.அழகேசன் அரியலூர் விபத்து ஏற்பட்டவுடன் பதவியை ராஜினாமா செய்தார். சாஸ்திரியும் ராஜினாமா செய்திருக்கிறார். மம்தா பானர்ஜியும் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த பொழுது விபத்து நடத்தவுடன் ராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் ரயில்வே துறை அமைச்சராக இருந்த பொழுது ராஜினாமா செய்தார். ஏன் பாஜக அமைச்சர்கள் மட்டும் ராஜினாமா செய்ய மறுக்கிறார்கள். பிடிவாதமாக இருக்கிறார்கள். அதிகார வெறி என்பது இதன் மூலமாக தெரிகிறது. ஆகவே இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட விபத்துக்களை தவிர்க்க வேண்டும். சிஏஜி அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் லட்சக்கணக்கான கோடி நிதியை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்''என்றார்.

Next Story

போக்சோ வழக்கு; எடியூரப்பாவிடம் விசாரணை!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Former Karnataka CM BS Yediyurappa POCSO case

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான எடியூரப்பா 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இவர் மீது கடந்த மார்ச் 15 ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே சமயம் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே, எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடர்ந்த 17 வயது சிறுமியின் தாயாரான 54 வயது பெண் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி திடீரென்று நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். இது குறித்தும் சதாசிவ நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Former Karnataka CM BS Yediyurappa POCSO case

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவுக்கு சிஐடி சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ஜூன் 17 ஆம் தேதி சிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜராவதாக எடியூரப்பா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய சிஐடி வாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து சிஐடி விசாரிக்கப்பட்டு வரும் புகாரை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘அவர் முன்னாள் மாநில முதல்வர். அவர் நாட்டை விட்டா ஓடிவிடுவார்?. பெங்களூரில் இருந்து டெல்லிக்கு கிளம்பி அவரால் என்ன செய்ய முடியும்?. உடல் நலக்குறைவு உள்ள மனுதாரரான முன்னாள் முதல்வரை கைது செய்து காவலில் வைக்கும் முடிவுக்கு நாம் உடனடியாகச் உத்தரவிட முடியாது. அதனால் ஜூன் 17ஆம் தேதி அன்று அடுத்த விசாரணை நடைபெறும். அதுவரை அவரை கைது செய்ய முடியாது’ என்று கூறி, எடியூரப்பா கைதுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிஐடி அதிகாரிகள் முன்பு இன்று (17.06.2024) காலை 10:50 மணிக்கு ஆஜரானர். இதனையடுத்து எடியூரப்பாவிடம் சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.