தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தமிழக பாஜகவுக்கு தலைவர் பதவி நியமிக்கப்படாமல் இருந்தது.
தலைவர் பதவிக்கு ஏற்கனவே தலைவராக இருந்தவர்களும், மாநில பொறுப்பில் இருக்கும் பலரும் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று டெல்லியில் உள்ளவர்களை சந்தித்து அழுத்தம் கொடுத்தனர். டெல்லியோ தற்போதைக்கு தலைவர் பதவியை நியமிக்காமல் அப்படியே இழுத்தடித்து வந்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடந்த திருமண விழா ஒன்றில் பாஜக மாநில துணைத் தலைவர் அரசக்குமார், அதே திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்த்து பேசினார். மேலும், எம்.ஜி.ஆருக்கு பிறகு நான் ரசித்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான். இயக்கத்திற்காக நன்றி கடன் பட்டவன். காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். தளபதி அரியணை ஏறுவார். அதையெல்லாம் நாம் பார்த்து அகம் மகிழ்ச்சி அடைவோம் என்று பேசினார்.
இவரது பேச்சு மாநில பாஜகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் தமிழக பாஜக தலைமை அலுவலக பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜ துணை தலைவர் பி.டி.அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில தலைமைக்கு தலைவர் இல்லாத காரணத்தினால் நிர்வாகிகள் சிலரே இப்படி கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுகின்றனர். ஆகையால் விரைவில் பாஜக மாநில தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் டெல்லிக்கு அழுத்தம்கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்தவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் திடீரென்று டெல்லி அழைத்ததன் பேரில் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இதுகுறித்து விசாரித்தபோது, தலைவர் பதவி அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறோம் என்றனர் பாஜகவினர்.