தமிழைத் தேடி என்னும் பயணத்தை சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மேற்கொள்ள இருக்கிறார். இது குறித்து கடந்த சில தினங்கள் முன் அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையில், “அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக தமிழகத்தின் பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும். பள்ளிகளில் தொடங்கி கோயில்கள் வரை எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21-ம் தேதி உலக தாய்மொழி நாளில் சென்னையில் தொடங்கி மதுரை வரை 8 நாட்கள் ‘தமிழைத் தேடி’ பிரச்சார பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். 21ம் தேதி காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் பிரச்சார பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது” எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நடத்தும் ' தமிழைத் தேடி' விழிப்புணர்வுப் பரப்புரைப் பயணம் தொடக்க விழா, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இன்று உலகத் தாய்மொழி நாள். தாய்மொழியை மதிக்காதவன், தாயை மதிக்காதவனுக்குச் சமம் ஆவான். தமிழர்களாகிய நாம் தமிழ் மொழியிலேயே எழுதுவோம், உரையாடுவோம், பேசுவோம். குழந்தைகளை தமிழிலேயே படிக்க வைத்து, தாய்மொழியின் பெருமைகளைக் கற்றுத் தருவோம்!
தமிழை வளர்க்க வேண்டிய, காக்க வேண்டிய கடமை அரசுக்கு தான் அதிகம். மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியவாறு தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழைக் கட்டாய பயிற்று மொழியாக்கவும், கட்டாய பாடமாக்கவும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும். தமிழ் வாழ்க!” என ட்விட்டரில் கூறியுள்ளார்.