கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், 'பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக தந்தையையே ஒதுக்கி வைத்துவிட்டு இந்தியா வாழ்க என்று சொன்னோம். நான் பிரதமருக்கு அமித்ஷாவுக்கு மெத்தப் பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அண்ணா வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்' என்றார்.
இந்த பேச்சு வைரலான நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் பாஜகவின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், 'ஆ.ராசா சொல்கிறார் தனிநாடு கேட்போம் என்று, ஆ.ராசாவுக்கு இருக்கும் ஆசை நயினார் நாகேந்திரனுக்கு மட்டும் இல்லாமலா போய்விடும். நான் கேட்பேன் தமிழ்நாட்டை இரண்டா பிரிங்க'னு கேட்பேன். 234 தொகுதி இருக்கு 117... 117... ஆ பிரிப்போம். நாங்களும் இரண்டு இடத்திலும் முதலமைச்சராக வந்துவிடுவோமில்ல. தமிழ்நாட்டின் தென் பகுதியிலும் முதல்வராக வந்துவிடுவோம், வட பகுதியிலும் முதல்வராக வந்துவிடுவோம். பாண்டிய நாடு, பல்லவ நாடு... எதையோ பிடிக்கப்போய் எதையோ பிடிச்சுக்கிட்டு வம்பா முழிக்காதீங்க... அதை செய்யமுடியாது என நினைக்காதீர்கள். செய்ய கூடிய இடத்தில் தான் நாங்க இருக்கோம். பிரதமர் மோடி நினைத்தால் முடியும்'' என்றார்.
இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''80க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற இடங்கள், 400 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்திரபிரதேசத்தையே இவர்களால் பிரிக்க முடியவில்லை தமிழ்நாட்டை ஏன் பிரிக்க வேண்டும். என்ன காரணத்திற்காக பிரிக்க வேண்டும் என சொல்கிறார்கள். இவர் அப்படி பேசுகிறார் என்றால் பாஜக எல்லா வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதற்கு துணிச்சலான, அரசியல் சட்டத்தை மதிக்காத கட்சி என்று இவர் சாட்சி சொல்கிறார் என்றுதான் பொருள். மத்தியில் அதிகாரம் இருப்பதால் தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பேன் மூன்றாக பிரிப்பேன் என்று சொல்கிறார்கள். எனக்கு இதில் ஒரு அற்ப ஆசை, தமிழ்நாடு மூன்றாக பிரிக்கப்பட்டால் திமுகவில் மூன்று முதலமைச்சர்கள் இருப்பார்கள் என்றுகூட நாம் எடுத்துக்கொள்ள முடியும்'' என்றார்.