
“எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓரணியில் திரள வேண்டும்; இதனைக் கோரிக்கையாக விடுக்கவில்லை வலியுறுத்துகிறேன்” என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளனர்.
இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கலந்துகொண்டு பேசும்போது, “தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கையாக விளங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தியா மிக நெருக்கடியில் உள்ளது. அதை யாரும் மறக்க முடியாது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மிக அச்சுறுத்தலில் உள்ளது. இந்தியாவிற்கும் ஜம்மு காஷ்மீருக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்பது நாம் ஒற்றுமையாக இருந்து வலுவான இந்தியாவை உருவாக்குவது என்பதே. அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனை முறியடிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் ஓரணியில் திரள வேண்டும். இதனைக் கோரிக்கையாக விடுக்கவில்லை; வலியுறுத்துகிறேன். உறுதியான நம்பிக்கை உள்ள ஒவ்வொருவராலும் நாட்டின் போக்கை மாற்ற முடியும். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் இந்திய குடிமக்கள் தான்.” எனக் கூறினார்.