திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பல நாட்களாக திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் பல்வேறு கட்டங்களாக தனித்தனியே காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உள்ளிட்ட 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தற்போது கையெழுத்தாகி உள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீட்டு கையெழுத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ''தமிழக காங்கிரஸ் பன்னெடுங்காலமாகவே சொல்லி வருகின்ற தத்துவம் மதசார்பற்றதன்மை. அதுதான் இந்த கூட்டணி என்பதை ஒரு நேர்கோட்டில் இணைத்து இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் சேர்ந்து இந்த மதசார்பற்ற கூட்டணியை அமைத்து இருக்கிறோம். மதச்சார்பற்ற தன்மை வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் சேர்ந்திருக்கிறோம். அதற்காகத்தான் தமிழகத்தில் இருக்கிற திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருக்கிற கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இன்று இந்தியாவின் மிகப்பெரிய நோயாக பாஜக வளர்ந்து இருக்கிறது. அது நோயாக இருப்பது மட்டுமல்ல அந்த நோயை மற்றவர்கள் மீதும் பரப்புவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள். கரோனா வைரஸை விட ஆபத்தான ஒரு ஆயுதமாக அவர்கள் இன்று விளங்கி வருகிறார்கள். இந்தியாவில் இருக்கிற பல்வேறு அரசியல் கட்சிகளுக்குள் உட்புகுந்து அந்த இயக்கங்களை உடைப்பது, பலவீனப்படுத்துவது அல்லது அதில் இருக்கிறவர்களை கட்சி மாற வைப்பது, அரசாங்கத்தை சீர்குலைப்பது, கவிழ்ப்பது என்று பல்வேறு நிகழ்வுகளை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.