வேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நிறுத்தப்பட்டபோது வேட்பாளர்களாக இருந்த தி.மு.க. கதிர் ஆனந்தும், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகமும், நாம் தமிழர் தீபலட்சுமியும் இப்போது மீண்டும் களம் காண்கிறார்கள். சைலண்ட் மோடில் இருக்கும் அ.ம.மு.க. இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது.
தேர்தல் நிறுத்தப்பட்டபோது போட்டியிட்ட பாண்டுரங்கன், தினகரனை நம்பி ஏராளமாக செலவு செய்து திண்டாட்டத்தில் இருக்கிறார். அதேபோல் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர்களும் கடனாளிகளாகிவிட்டனர். இங்கிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவும் தைரியமும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் வரிசையில் சிவசங்கரன் அ.தி.மு.க.விலும் முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன் தி.மு.க.விலும் அடைக்கலமாகிவிட்டனர். மற்றவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார்களாம்.
ஆகையால் தேர்தல் தோல்வியில் இருந்து தினகரன் இன்னும் எழுந்துவரலையாம். அதோட தனது தொடர் சங்கடங்களுக்கு, இப்ப இருக்கும் அடையாறு வீட்டின் வாஸ்து கோளாறுதான் காரணம்ன்னு அவர் நினைக்கிறாராம். அதனால் கொஞ்சநாள் புதுவையில் போய் ஸ்டே பண்ணலாமாங்கிற யோசனை அவருக்கு வந்திருக்காம். இந்த நிலையில் அவர் கூடாரத்தில் இருக்கும் திருச்சி மனோகரன் அ.தி.மு.க. பக்கமும், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் தி.மு.க. பக்கமும் தாவப் போறதா வந்த தகவலால், தினகரன் மேலும் நொந்து போயிட்டாராம்.
இந்த நிலையில் திங்கள்கிழமை தருமபுரி பாப்பிரெட்டிபட்டியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தால் அதில் அமமுக போட்டியிடாது என்று தெரிவித்துள்ளார்.