இன்னும் ஆறு மாதத்தில் தமிழக அரசியலில் மாற்றம் வருமெனவும் மேலும் திமுகவின் சில மூத்த தலைவர்களும் அதிருப்தியில் உள்ளவர்களும் பாஜகவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துவருகிறார்கள் என சில மாதங்களுக்கு முன்பாக பாஜக தமிழக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். இதேபோல் அன்மையில் திமுகவிலிருந்து பாஜகவிற்கு சென்ற வி.பி.துரைசாமியும் இதேகருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவின் தமிழக மாநில பொதுச்செயலாளரான சீனிவாசனும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு பிரதிநிதியாக பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுகவின் பல முன்னணி தலைவர்கள் ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். தமிழகத்தில் திமுக, ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் திமுகதான் எங்கள் அரசியல் மற்றும் சித்தாந்த எதிரி. இந்திய தேசியத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத, பிரிவினைவாதத்தை தூண்டுகிற, ஒரு மொழியை, ஒரு தரப்பினரை எதிர்க்கிற விகாரமான கட்சி அது.
அதுமட்டுமின்றி ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களும் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். தமிழக அரசு, பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்து ரூ.110 கோடி அளவுக்கு பணத்தை மீட்பதில் அக்கறை காட்டிவருகிறது. ஆனால், அதுமட்டும் போதாது முறைகேடு செய்தவர்கள் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா ஊரடங்கு தளர்வு வழிகாட்டு நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை பின்பற்றி தமிழக அரசு அரசியல் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
அதிமுகவின் முக்கிய எதிரியும் திமுக என்பதால் நாங்கள் இருவரும் நண்பர்களாக உள்ளோம். பல விஷயங்களில் எங்களோடு ஒத்துப்போவதால் அதிமுகவுடன் நண்பர்களாக உள்ளோம் எனத் தெரிவித்தார்.