மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்தவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில் இறையூர் கிராமத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். இதன் பின் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடைபெறக்கூடாத, மனிதாபிமானமற்ற, கண்டிக்கத்தக்க செயலை யார் செய்திருந்தாலும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்.
அந்த இடத்தில் கழிவுகள் கலக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டிக்குப் பதிலாக புதிய நீர்த்தேக்க தொட்டிக்கான பணிகள் இன்னும் இரண்டு தினங்களில் தொடங்கப்படும். அந்தப் பணிகள் 20 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, மீண்டும் அந்த மக்களுக்கான புதிய நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க மனிதர்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். கணியன் பூங்குன்றனார் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனச் சொல்லியுள்ளார். அந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும், மனிதநேயத்தோடு, மற்றவர்களை மதிக்கக்கூடியவர்களாக அனைவரும் மாறினால், இதுபோன்ற நிகழ்வுகள் எங்கேயும் நடைபெறாது.
கண்டிப்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும். யாருக்கும் எந்த தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்” எனக் கூறினார்.