
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவிக் காலம் முடிந்தது. இதன் காரணமாக புதிய மாநிலத் தலைவராக அக்கட்சியின் தமிழகச் சட்டமன்றக் குழு தலைவரான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கடந்த 12ஆம் தேதி (12.04.2025) தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்று பிறகு முதன் முறையாக டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று (28.04.2025) சந்தித்துப் பேசினார். அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா, நைனார் நாகேந்திரனுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக திமுக அரசின் ஊழல் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், மத்திய இணை அமைச்சர் எல். முருகனையும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியுள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்பட்டாலும் அரசியல் ரீதியாக இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பா.ஜ.க. - அ.தி.மு.க. இடையே கூட்டணி அமைந்திருக்கக்கூடிய சூழலில் தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.