என் வாக்கு பலித்துவிட்டது. நீங்கள் கூட அருள்வாக்கு கேளுங்கள் கண்டிப்பாகச் சொல்கிறேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு எனப் பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்து அதிமுக ஈபிஎஸ் தரப்பின் சார்பாக சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஓபிஎஸ் நடத்துவது தனியார் நிறுவனம். அதில் இயக்குநர்கள் கூட்டம் தான் நடக்கிறது. அது கட்சிக் கூட்டம் இல்லை. அதில் மனித வள மேம்பாடு மூலம் ஆட்களை எடுத்தார்கள். ஆட்களை பணியில் அமர்த்தியுள்ளார்கள். விலை மோரில் நெய் கடையும் வித்தைக்காரர். அவரில் செயல்பாடுகள் தமிழக அரசியலில் எடுபடாது.
உலக அளவில் நூறு கோடி பேர் அர்ஜெண்டினா, பிரான்ஸ் கால்பந்து ஆட்டத்தைப் பார்த்தனர். அர்ஜெண்டினா தான் ஜெயிக்கும் என்று கூறியிருந்தேன். என் வாக்கு பலித்துவிட்டது. நீங்கள் கூட அருள்வாக்கு கேளுங்கள். கண்டிப்பாகச் சொல்கிறேன். நாங்கள் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கிறோம். விளையாட்டு என்பது மக்கள் எதிர்பார்க்கும் விஷயம். எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அதற்கேற்றார் போல் ஆட்டத்தை பார்த்தும் நான் சொன்னேன்.
ஆனால், விளையாட்டுத் துறை அமைச்சர் அதை சொல்லவில்லை. பெரிய அளவில் நேரு மைதானத்தில் அனைவரையும் அழைத்து அவர்களுடன் பார்த்திருக்க வேண்டும் தானே.
பண்ருட்டி ராமச்சந்திரனை நான் மதிக்கிறேன். அவர் சீனியர். அவர் ஏன் இப்படி ஆகிவிட்டார் என நான் மிக வருத்தப்படுகிறேன். கட்சியின் சார்பில் இருக்கும் அனைத்தும் எங்களுடன் இருக்கும் போது பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு இங்கு இருக்கலாம். அவரை பொறுத்தவரை அவருக்கு இருக்கும் பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்பது என் விருப்பம்” எனக் கூறினார்.