இஸ்லாமியர்கள் கொண்டாட வேண்டிய தலைவர் காந்தியடிகள் தான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார். அதில், “நான் இதை இஸ்லாமியர்கள் மத்தியில் கூட அடிக்கடி சொல்லுவேன். இஸ்லாமியர்களால் தூக்கிக் கொண்டாடப்பட வேண்டியவர் ஒருவர் உண்டு என்றால் அது காந்தியடிகள் ஒருவர் தான்.
இந்து, முஸ்லீம் ஒற்றுமையைப் பேசியதற்காகக் கொல்லப்பட்டார். வேறு எந்த நோக்கமோ காரணமோ இல்லை. பாகிஸ்தான் பிரிந்து விட்டது. அதைக் கட்டமைப்பதற்காக இந்திய அரசு ஒரு தொகையைத் தர வேண்டும். முதல் இரண்டு தவணையைக் கொடுத்துவிட்டது. மூன்றாவது தவணை ரூபாய் 55 கோடியைக் கொடுக்காமல் காலம் தாழ்த்துகிறது.
இதனால் நெருக்கடியான சூழல் நிலவியது. வன்முறை நிகழும் சூழல் இருந்தது. அந்த நிலையிலும் கூட உண்ணாநோன்பு இருந்தவர் காந்தியடிகள். இதற்கு நேரு உடன்பட்டு, தரவேண்டிய நிதியை வழங்கினார்” எனக் கூறினார்.