அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம், வேலைக்கு பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு திமுக கூட்டணிக் கட்சிகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து அராஜகத்தை அரங்கேற்றி அரசியல் குழப்பங்களை உருவாக்குவதற்காகவே பாஜக அரசால் அனுப்பப்பட்டுள்ள முகவரான ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் மாநில உணர்வுகளோடு விளையாடும் வகையில் அமைந்திருக்கிறது. அதன் ஒரு அங்கமாகவே இப்பொழுது தமிழ்நாட்டின் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை தன்னிச்சையாக நீக்குவதாக ஆர்.என். ரவி அறிவித்திருக்கின்றார்.
இது அரசியல் சாசனத்தின் விழுமியங்களை காலில் போட்டு மிதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஆர்எஸ்எஸின் நேரடி கட்டுப்பாட்டுக்கு தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்ற பேராசையோடு அவர் செயல்பட்டு வருவது இதன் மூலம் அம்பலம் ஆகியிருக்கிறது. தமிழ்நாட்டின் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கியதாக அறிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சமாக அமைந்துள்ளது.
மக்களவையின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.டி.தி.ஆச்சாரியா, 'முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில அமைச்சரை ஆளுநர் நீக்க இயலாது. அவ்வாறு அவர் நீக்கினால் அது மாநில அரசின் நிர்வாகத்திற்கு இணையான ஒரு நிர்வாகத்தை நடத்துவதற்கு ஒப்பானது' என்று தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். நாட்டில் ஒரே அரசு தான் இருக்க வேண்டும். அது ஒன்றிய அரசு மட்டுமே என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரின் சிந்தனையின் வெளிப்பாடே இந்த நடவடிக்கை. தமிழ்நாட்டை விட்டு ஆர்.என்.ரவியை விரட்டும் வரை முதலமைச்சர் தொடர் போராட்டத்தை அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.