ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 288 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழகத்திலிருந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான ஐஏஎஸ் அதிகாரி குழுவினர் ஒடிசா சென்றுள்ளனர். அதேபோல் அமைச்சர் உதயநிதியும் ஒடிசா சென்றுள்ளார்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், ''தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து வருவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல தொடர்பு கொள்வதற்கு கண்ட்ரோல் ரூம் ஒன்று தென் மண்டலத்துடைய கண்ட்ரோல் ரூமுடன் இணைந்து செயல்படுவதற்கு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். உதவி தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டு இருக்கிறது. இத்தனை அறிவிப்புகளையும் செய்ததற்குப் பிறகு இன்று காலை 8 மணி அளவில் தென்னக ரயில்வே உடைய கட்டுப்பாட்டு அறைக்கு சென்று ஒடிசா கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டு என்னென்ன பேரிடர் மேலாண்மை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கலந்து பேசி தகுந்த அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.
இந்திய துணை கண்டத்தையே உலுக்கியிருக்கின்ற இந்த விபத்தில் ஒரு மாநிலத்தினுடைய முதலமைச்சர் இவ்வளவு விரைவாக பணியாற்றி தமிழ்நாட்டு மக்களுக்காக மட்டுமல்ல, விபத்தில் சிக்கி இருக்க கூடிய அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும்; இறந்தவர்களுக்கு உரிய முறையில் நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்; அவர்கள் உரிய இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்பது உட்பட எல்லா பணிகளையும் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மேற்கொண்டு இருக்கிறார்.
இந்த பணிகளுக்கு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் தொடர்பில் வைத்து எல்லா பணிகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. இதை திராவிட முன்னேற்ற கழகமோ, தமிழக முதல்வரோ அரசியல்படுத்த விரும்பவில்லை. இதில் திமுக அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்திய வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அமைச்சர்கள் தார்மீகமாகப் பொறுப்பேற்றிருக்கிறார்கள். மம்தா பானர்ஜி உட்பட நிதீஷ் குமார், லால் பகதூர் சாஸ்திரி உட்பட நிறைய பேர் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
எனக்கு என்ன கேள்வி என்றால் அந்த காலத்தைவிட இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. மம்தா பானர்ஜி ரயில்வே மினிஸ்டரை பக்கத்தில் வைத்துக் கொண்டே சொல்கிறார், 'எங்களுடைய ஆட்சிக்காலத்தில் நான் இருந்த பொழுது 'ட்ரெயின் டிரான்ஸ்போர்ட் ஆக்சிடென்ட் அவாயிடிங் சிஸ்டம்' என்ற பெயரில் ஒரு சிஸ்டத்தை கொண்டு வந்தோம். அந்த சிஸ்டத்திற்கு எங்கள் பெயர் வரக்கூடாது என இந்த ஆட்சி 'கவாச்' என்று மாற்றியது. அந்த கவாச் சிஸ்டத்தை பொருத்துவதற்காக நிதி ஒதுக்குறோம் என்று சொன்னீர்கள். இந்தியாவில் ஏறத்தாழ 70,000 கிலோமீட்டர் ரயில்வே பாதை உள்ளது. அதில் வெறும் 1500 கிலோமீட்டருக்குத்தான் தான் இந்த கருவி பொருத்தி உள்ளீர்கள். இரண்டு சதவீதம் கூட இல்லை' என நேரடியாக குற்றம் சாட்டுகிறார்.
இதற்கு நரேந்திர மோடியிடம் இருந்தோ, ரயில்வே துறை அமைச்சரிடம் இருந்தோ எந்த பதிலும் இல்லை. திமுக இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை. இவ்வளவு தொழில்நுட்பம் வந்ததற்கு பிறகும் இந்த கோர விபத்து நடந்ததற்கு யார் காரணம். சிஸ்டமா? தனி மனிதரா? சிஸ்டம் என்றால் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்வது யார்? ஆனால் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு சின்ன விஷயம் என்றால் முதலமைச்சர் பதவி விலகணும், சம்பந்தப்பட்ட அமைச்சர் ராஜினாமா செய்யணும் என்று சொல்கின்ற பிஜேபி, அதிமுக இதுவரைக்கும் ஏன் வாய் திறக்கவில்லை.
எங்களுக்கு வேண்டியது மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். ரயில்வே துறை விளம்பரத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாததால் தான் இது நிகழ்ந்துள்ளது. அமைச்சரோ, அதிகாரிகளோ கவனம் செலுத்தி இருப்பார்கள் என்றால் இந்த விபத்து நடந்திருக்காது என்பது என்னுடைய கருத்து. ஒரு செயல் நடைபெறுவதற்கு முன்பு நடவடிக்கை எடுப்பது என்பது வேறு. ஒரு விபத்தை தடுப்பதற்கு எடுக்கும் நடவடிக்கை என்பது வேறு. நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். இந்த விபத்திற்கு பிறகு மத்திய அரசு ஸ்தம்பித்துப் போய் உள்ளது. அவர்களுக்கே என்ன சொல்ல வேண்டும் என புரியவில்லை. கள்ளச்சாராயம் பற்றி சொன்னீர்களே, கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மீதும் குற்றம் இருக்கிறது. ஆனால் பயணம் செய்தவர்கள் மீது என்ன குற்றம் இருக்கிறது. ரயில்வே மினிஸ்டரை ஒரு முதல்வர் (மம்தா பானர்ஜி) குற்றம் சாட்டுகிறார். உங்களால்தான் சிஸ்டம் போய்விட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் அதற்கு நீங்கள் பதில் சொல்லாமல் வாய்மூடி மௌனியாக இருப்பது எதை காட்டுகிறது'' என்றார்.