அதிமுக கூட்டணியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய ஊர்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;
நாடாளுமன்ற தேர்தல் என்பது நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாக அமைந்துள்ளது. எனவே இத்தேர்தலில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் வளமும் முக்கியமாக இடம்பிடித்துள்ளது. அதற்கேற்ற வகையில் பிரதமரை தேர்ந்தெடுப்பது முக்கிய கடமையாக உள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கும் வளத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட வேண்டும். அந்நிய தீய சக்திகளை ஒழித்திடவும் அவர்களின் ஊடுருவலை தடுக்கவும் மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அதிமுக ஆட்சியில் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தியாவிலேயே அமைதி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இதற்கான முடிவு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படுகிறது என்பதற்கான சிறப்பு விருதினையும் குடியரசுத்தலைவர் வழங்கி நான் அதை பெற்றுள்ளேன்.
இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையிலும், வேலைவாய்ப்பு பெறுகின்ற வகையிலும் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.40 லட்சம் கோடி அளவிற்கு பல்வேறு தொழிற்சாலைகள் மூலம் தமிழகத்தில் முதலீடு பெறப்பட்டுள்ளது. இதற்காக 304 திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஐந்தரை லட்சம் பேர் இதன் மூலம் வேலைவாய்ப்பு பெறுகின்ற வழி காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்துள்ளோம். மின்சாரத்தடை அதிகளவில் இருந்த மாநிலமாக தமிழகம் இருந்த நிலையில் தற்போது மூன்றாண்டுகளில் அதனை சரிசெய்து தடையில்லா மின்சாரம் என்ற நிலைப்பாட்டோடு தமிழகம் இருக்கின்றது. இவ்வாறு அவர் பேசினார்.