Skip to main content

அதானிக்கு வெளிநாடுகளில் கான்ட்ராக்ட் வாங்கிக் கொடுத்த மோடி - காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Modi-Congress MP who bought contracts abroad for Adani Accusation

 

விருதுநகர், மீசலூர் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலையரங்கத் திறப்பு விழா நடைபெற்றது.

 

இவ்விழாவில் கலந்துகொண்டு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசியபோது, “100 நாள் வேலைத்திட்டம் கிராமங்களின் வாழ்வாதாரம். ஆனா.. இந்த பட்ஜெட்ல 100 நாள் வேலைத்திட்டத்துக்கு நம்ம நிர்மலா சீதாராமன் 30 ஆயிரம் கோடி ரூபாயை குறைச்சிருக்காங்க. 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதிக்குறைப்பு நடந்திருக்கு. ஏனென்றால்.. இந்த அரசு அதானியுடைய அரசா செயல்படுது...

 

யார் இந்த அதானி? உலகத்துலயே 2-வது பணக்காரனா இருக்கிறவரு அதானி. நீங்க வாங்குற பெட்ரோலா இருக்கட்டும்.. நீங்க வாங்குற கேஸ் சிலிண்டரா இருக்கட்டும்.. நீங்க போய்க்கிட்டிருக்கிற ரோடா இருக்கட்டும்.. எல்லாத்துலயும் அதானி. அவர உலகப் பணக்கார வரிசைல 2-வது இடத்துல கொண்டு வந்து நிறுத்திட்டாரு மோடி. 8 வருஷத்துல நடந்த மிகப்பெரிய மாற்றம்னா.. உங்களுக்கும் எனக்கும் நடந்துச்சான்னா.. நாம யோசிக்க வேண்டியிருக்கு. ஆனா.. அதானிக்கு மட்டும் பெரிய மாற்றம் நடந்திருக்கு. அவரு வந்து குஜராத்காரர்.. குஜராத்ல தொழில் செஞ்சுக்கிட்டிருந்தவர.. மோடி இந்த 8 வருஷத்துல...  அதானிய உலகத்துல 2-வது பணக்காரனா மாத்திட்டாரு. பெரிய சாதனைதானே? இதுதான் மோடியோட சாதனை. அந்த அதானி பண்ணிட்டிருந்த பிராடுத்தனம் எல்லாம் இப்ப பெரிய ரிப்போர்ட்டா வந்திருக்கு. பார்லிமெண்ட்ல நாங்க எல்லாரும் பிரதமர்கிட்ட கேள்வி எழுப்பினோம். ராகுல்காந்தி அன்னைக்கு பார்லிமெண்ட்ல பேசினாரு. நீங்க எல்லாரும் கவனிச்சிருப்பீங்க.

 

அதானி எப்பப்ப வெளிநாடு போயிருக்காரு? நீங்க இல்லாம அதானி வெளிநாட்டுக்கு போகும்போது, அந்த நாடுகள்ல அதானிக்கு என்னென்ன கான்ட்ராக்ட் கிடைச்சிருக்கு? உங்ககூட போகும்போது அவருக்கு என்னென்ன கான்ட்ராக்ட் கிடைச்சிருக்கு? இந்த விவரத்த மட்டும் தெரிவிங்கன்னு சொல்லிருக்காரு. ஏன்னு கேட்டீங்கன்னா.. இலங்கையா இருக்கட்டும்.. ஆஸ்திரேலியாவா இருக்கட்டும். பங்களாதேஷா இருக்கட்டும். அல்லது, எந்த ஒரு நாடா இருக்கட்டும். இந்தியாவுல இருந்து மோடி போகும்போது, கூட்டிட்டு போற முக்கியமான பணக்காரரு யாரா இருக்காருன்னு பார்த்தா.. அதானியாத்தான் இருக்காரு. அவருக்கு போயி அந்த நாட்டுல இருக்கிற கான்ட்ராக்ட வாங்கிக் கொடுக்கிறதுதான் மோடியோட வேலையா இருக்கு. அதனோட விளைவா 609-வது இடத்துல இருந்தவரு, உலகப் பணக்காரர்கள்ல ரெண்டாவது இடத்துக்கு உயர்ந்திருக்காருன்னா.. அது எல்லாத்துக்கும் பொறுப்பு மோடியோட கடுமையான உழைப்பு.

 

100 நாள் வேலை திட்டம், மத்திய அரசோட திட்டம். இந்த திட்டத்த கொண்டுவரும்போது, அன்னை சோனியாகாந்தி அவர்கள், மன்மோகன்சிங் பிரதமரா இருந்தபோது, இங்கே தமிழ்நாட்டுல கலைஞர் முதலமைச்சரா இருந்தபோது, 2006-2007ல இந்த திட்டத்த கொண்டுவந்தாங்க. இந்த திட்டத்தோட நோக்கம் என்னவா இருந்துச்சு? நம்ம கிராமங்கள்ள ஊராட்சில இருக்கிற பெண்கள், வருஷத்துல 365 நாட்கள்.. அதுல 150 நாட்கள் விவசாயம் இல்லாத நாளா இருக்குது. அந்த 150 நாட்கள் விவசாயம் நடக்காது. தஞ்சாவூரைத் தவிர 300 நாட்களும் விவசாயம் பார்க்கிற பகுதிகள் கிடையாது. 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளா அதிகமாக்கணும். எப்பல்லாம் விவசாயம் இல்லையோ, அப்பல்லாம் இந்த வேலைய வைக்கணும்கிறதுதான் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளோட கோரிக்கை. எங்களோட நிலை தெளிவான நிலை. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து டெல்லில ஆட்சி அமைக்கும்போது, இந்த திட்டத்த 100 நாள் திட்டத்துல இருந்து 150 நாள் திட்டமா மாற்றுவோம்கிறது.. நாங்க திருப்பி திருப்பி சொல்லிட்டு வர்றது, இந்த திட்டத்தை பாதுகாக்க வேண்டியது நம்ம ஒவ்வொருவரோட பொறுப்பு. இந்த திட்டத்தை காக்க வேண்டியது நம்மளோட பொறுப்பு. இந்த திட்டத்தை காப்பதற்கான போராட்டங்கள நடத்தி அந்த வழில தொடர்ந்து செல்வோம்.

 

இந்த பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்துக்குரிய பட்ஜெட். இந்த பட்ஜெட் என்னவா இருக்குன்னா, பெரும் பணக்காரர்களுக்கு உதவுற பட்ஜெட்டா மாறிருச்சு. ஏழை எளிய மக்களுக்கு எந்தவொரு நல்ல திட்டத்தையும் கொடுக்காத பட்ஜெட்டா ஆயிருச்சு. குறிப்பிட்டு சொல்லணும்னா, தமிழகத்தை வஞ்சிக்கிற பட்ஜெட்டா இருக்கு. எந்தவொரு ரயில்வே திட்டமா இருந்தாலும் சரி, நெடுஞ்சாலை திட்டங்களா இருந்தாலும் சரி, எதற்கும் பெரிய அளவிலே நிதி கொடுக்கிறது இல்ல.  நம்ம விருதுநகர் மாவட்டத்துக்கு, இது பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தி செய்யும் மாவட்டம். இந்த தொழிலைப் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசோட கடமை. அதற்கான சிறப்பு நிதியை பட்டாசு மண்டலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வச்சிட்டு வர்றோம். ஆனால், அதற்கான நிதி அளிக்கவில்லை. மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை, குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தை வஞ்சிக்கிற அரசாக தொடர்கிறது” என்று பா.ஜ.க. அரசைப் போட்டுத் தாக்கினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்