நிலம் கேட்டு மிரட்டி ஆக்கிரமிப்பு செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் சுற்றுலா மற்றும் உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜு. இவரும் இவரது மனைவி பிரேமாவும் மஞ்சூர் அருகே உள்ள மணிச்சல் கிராமத்தில் தங்களுக்குச் சொந்தமான 16 செண்ட் தேயிலைத் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
ராஜுவின் சகோதரருக்குச் சொந்தமான இடத்தை அதிமுக கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் சுற்றுலா மற்றும் உணவுத்துறை அமைச்சருமான புத்தி சந்திரன் விலைக்கு வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜுவின் தேயிலைத் தோட்டத்தையும் விலைக்கு கேட்டுள்ளார். விலை குறைவாக இருந்ததால் விற்க மறுத்த ராஜுவிடம் புத்தி சந்திரன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தகராறு அடிக்கடி நடந்துள்ளது.
தொடர்ந்து, புத்தி சந்திரன் ராஜுவின் சகோதரர்களிடம் வாங்கிய நிலத்தில் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் ராஜுவின் தோட்டத்தில் இருந்த தேயிலை செடிகளையும் அகற்றியுள்ளார். இது குறித்து ராஜு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் புத்தி சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் மீது மூன்று பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.