Skip to main content

மோசடி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி... மக்கள்நல ஆட்சிக்குத் தொடக்கப்புள்ளி! மு.க.ஸ்டாலின்

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
mk stalin speech



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ''மோசடி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி... மக்கள்நல ஆட்சிக்குத் தொடக்கப்புள்ளி'' என்ற தலைப்பில் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 

 

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

 

  மக்களின் மவுனப் புரட்சிக்கு விதையிடப்பட்டுள்ளது. மக்களைத் தேடிக் கழகமும், கழகத்தை நோக்கி மக்களும் பேரார்வத்துடன் வருவதை தமிழ்நாடு மீண்டும் பார்க்கத் தொடங்கியுள்ளது. மக்களிடம் செல்வோம்.. மக்களிடம் சொல்வோம்.. மக்களின் மனங்களை வெல்வோம் என்ற மக்களாட்சி முழக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த முடிவின்படி, தமிழ்நாட்டில் உள்ள 12ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் பொதுமக்களை நேரடியாகச் சந்திக்கும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் தொடங்கப்பட்டு தொய்வின்றித் தொடர்கிறது.


 

ஊராட்சி என்றாலே கிராமங்களை உள்ளடக்கியதுதானே! திருக்குவளை எனும் சிறிய கிராமத்தில் பிறந்து, திருவாரூர் எனும் சிறிய நகரத்தில் வளர்ந்து, இந்தியாவே அண்ணாந்து பார்த்து ஆச்சரியம் கொள்கின்ற அரசியலின் அரிய  ஆளுமையான தலைவர் கலைஞர் அவர்களின் நீங்கா நினைவுகளுடன் திருவாரூரையடுத்துள்ள புலிவலம் பகுதியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் ஜனவரி 9ந் தேதி கலந்துகொண்டு, கழகத்தின் களப்பணியைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். 


 

எத்தனை ஆர்வம் பொதுமக்களின் முகத்தில்! தொடர்ந்து சோதனைகளையே எதிர்கொள்ள நேரிட்டதால் எத்தனையோ வேதனைகள் அவர்களின் உள்ளத்தில்! அத்தனையையும் நட்பு ரீதியாகவும் உறவு ரீதியாகவும் வெளிப்படுத்திட அவர்கள் நம்புவது தி.மு.கழகத்தைத்தான் என்பதை, மத்திய-மாநில ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்த அந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் நன்கு உணர்ந்து  கொண்டேன். 


 

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என நமக்கு அறிவுறுத்திய தி.மு.கழகத்தின் நிறுவனர் பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது தம்பிகள்  யாவரும் மக்களிடம் செல்ல வேண்டும்;. அவர்களின் நிலையை உணவேண்டும்; அதிலிருந்து நம்முடைய பணியைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். தென்னாட்டு காந்தி எனப் போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் எந்த அடித்தட்டு மக்களிடம் செல்லப் பணித்தாரோ அந்த அடித்தட்டு மக்கள் நிறைந்த கிராமப்புறங்களைத்தான் இந்தியாவின் கோவில் என்றார் உலக உத்தமர் அண்ணல் காந்தியடிகள். எனவேதான், புலிவலம் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்ட போது, “நான் கோவிலுக்கு வந்திருக்கிறேன்’‘ என்று எனது உரையைத் தொடங்கினேன். 


 

கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என நமது பகுத்தறிவு நிலைப்பாட்டை பராசக்தி படத்திலேயே வெளிப்படுத்தியவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். கிராமங்கள் எனும் கோவில்கள் அ.தி.மு.க ஆட்சியில் கொடியவர்களின் கொள்ளைக்கு உள்ளாகி உருக்குலைந்து இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலைக்கூட நடத்த வக்கில்லாத அடிமை ஆட்சியாளர்களும், அவர்களை ஆட்டுவிக்கும் டெல்லி எஜமானர்களும் சேர்ந்து கொண்டு கிராம மக்களை மட்டுமல்ல -நகராட்சி-மாநகராட்சி மக்களையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் வஞ்சித்து வதைத்துக்  கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் வெளிப்படுத்திய உள்ளக் குமுறலிலிருந்தே உணர முடிந்தது. 


 

 கஜா புயல் பாதிப்பிலிருந்து இன்னமும் மீளாத திருவாரூர் மாவட்ட மக்களின் அவல நிலையை ஊராட்சி சபை கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய பெண்மணி விவரித்தபோது நெஞ்சம் கலங்கியது. திராவிடர் கழகத் தோழர் அருண்காந்தி, முஸ்லிம் ஜமாத் பிரமுகர் உள்ளிட்ட பலரும் இன்றைய ஆட்சியாளர்களின் அலங்கோலங்களையும் தலைவர் கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் தங்கள் நிலை இப்படி இருந்திருக்காது என்பதையும் உருக்கத்துடன் விவரித்தது இன்னமும் நெஞ்சில் நிழலாடுகிறது. எத்தனை கோடிப் பேர் வாழ்வின் நம்பிக்கை ஒளியாக விளங்கியிருக்கிறார் நம் தலைவர்! அந்த ஒளி அணைந்துவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர்களிடம் நான் உறுதியளித்தேன். பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் என் உருவத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் உள்ளத்தை உணர்ந்து கொண்ட காரணத்தால், தன் கையை என்னிடம் ஒப்படைத்து நெகிழ்ந்த தருணத்தை மறக்க இயலாது.

 

திருவாரூர் புலிவலம் ஊராட்சி சபைக் கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்து தஞ்சை நாஞ்சிக்கோடையில் நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்திலும் பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்களிடம் கொட்டிக் குவிப்பதற்கு ஏராளமான கோரிக்கைகள் இருப்பதை உணர்ந்தேன். குறிப்பாக, ஆண்களைவிட பெண்கள் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் விமர்சனங்களோடும் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தார்கள். 

 

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான தஞ்சாவூர்-திருவாரூர்-நாகப்பட்டினம் மாவட்டங்களின் இன்றைய நிலை, நெற்களஞ்சியமாக இருந்தது வெறும் புற்களஞ்சியமாகி விவசாயிகளின் வீட்டில் சோறு இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது. விவசாய விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை, விவசாயத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை, நூறு நாள் வேலைத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை, விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகளோ தொழிலகங்களோ உருவாக்கப்படவில்லை என்பதைப் பெண்கள் கண்ணீரோடு எடுத்துக்கூறி, நாங்கள் வாழ வேலை கொடுங்கள் எனக் கேட்டபோது, இதயத்தில் ஓராயிரம் இடிகள் தாக்கியது போல இருந்தன. 

 

இளைஞர்கள் பலரும் சொந்த மண்ணை விட்டுவிட்டு வெளியூர்களுக்குச் சென்று வேலை பார்க்கும் நிலைமை உருவாகியுள்ளது. அவர்களுக்குத் தங்கள் மாவட்டத்திலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே முதன்மையான கோரிக்கையாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2016 தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் பல தொழில் மண்டலங்களை உருவாக்கி, அந்தந்தப் பகுதிகளிலேயே வேலை வாய்ப்பு அளிப்பது குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் வாய்ப்பினை அந்தத் தேர்தல் முடிவுகள் தரவில்லை என்றாலும், எந்த நேரமும் வரவிருக்கும் தேர்தலில் நமக்கான வாய்ப்பை நம்மைவிட அதிகமாக தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதை ஊராட்சி சபை கூட்டங்களில் நேரடியாகக் காண முடிந்தது. 

 

நேற்றைய தினம் தீரர் கோட்டமாம் திருச்சி மாவட்டத்திலும் இன்றைய தினம் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாவட்டத்திலும் தொடர்ந்திடும் ஊராட்சி சபை கூட்டங்கள்  ஒவ்வொன்றும், மக்களுக்கெதிரான மத்திய-மாநில மோசடி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களாட்சி மலர்வதற்கான தொடக்கப் புள்ளியாகவே அமைந்துள்ளன. கழகத்தின் தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்ற ஊராட்சி சபைக் கூட்டங்களில் மட்டுமின்றி, கழகத்தின் பொருளாளர் அண்ணன் துரைமுருகன் அவர்களும், அவருடன் தயாநிதி மாறன் அவர்களும்,கழகத்தின் முதன்மைச் செயலாளர் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களும், கழகத்தின் நிர்வாகிகளும் தொகுதிப் பொறுப்பாளர்களும் பங்கேற்ற ஊராட்சி சபை கூட்டங்களிலும் இதே தன்மைதான் எதிரொலித்துள்ளன. 

 

கொட்டித் தீர்க்க முடியாத அளவிற்கான வேதனை மிகுந்த  நிலையையும் ஆட்சியாளர்களின் அலட்சிய-அராஜகப் போக்கையும் பொதுமக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்போதே, திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சுக் கொள்கையும் தமிழ்நாட்டை சமூக மறுமலர்ச்சி மாநிலமாக மாற்றிய திட்டமுமான சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் வகையில் பொருளாதார இடஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியிருக்கிறது மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு. அதற்கு அடிமைச் சேவகம் செய்யும் அ.தி.மு.க.வோ நாடாளுமன்ற விவாதங்களில் எதிர்ப்பது போல பாசாங்கு குரல் கொடுத்துவிட்டு, வாக்களிப்பின்போது வெளியேறி, மோடி அரசின் மோசடி செயலுக்கு ஆதரவு அளித்துள்ளது. 

 

வஞ்சக ஆட்சியாளர்களால் நெஞ்சமெல்லாம் புண்பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் விடியலுக்கான ஒரே நம்பிக்கையாக எதிர்பார்த்திருப்பது உதயசூரியனைத்தான். அது உதிக்கின்ற தேர்தல் நாளுக்காக பொதுமக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களின் விருப்பத்தை-எதிர்பார்ப்பை - நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமையில் உங்களில் ஒருவனான நானும், என்னுடன் துணை நிற்கும் உடன்பிறப்புகளான நீங்களும் இருக்கிறீர்கள். 
 

mk stalin speech


அவல ஆட்சிகளை அகற்றிட வேண்டிய அவசியத்தையும், கழக ஆட்சி மலர வேண்டிய காரணங்களையும் விளக்கி தலைமைக் கழகத்திலிருந்து ஏற்கனவே துண்டறிக்கைகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெறுகிற பகுதியிலும், கூட்டம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அந்த ஊராட்சியில் உள்ள கழக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, மக்களில் ஒருவரைக்கூடத் தவிர்க்காமல், அவர்களிடம் இந்த துண்டறிக்கைகளை வழங்கி, அது பற்றி விளக்கி, ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்றிட அழைப்பு விடுக்க வேண்டும்.  நேரடியாகப் பங்கேற்கிற மக்களின் எண்ணிக்கை பெருகும்போது, ஆட்சியாளர்களால் மக்கள் அனுபவிக்கும் அவலங்களின் அகல-நீள-ஆழத்தை நன்றாக அறிந்துகொள்ள முடியும். பங்கேற்க இயலாத சூழலில் இருப்பவர்களுக்கும்கூட துண்டறிக்கைகள் வாயிலாக உண்மை நிலவரம் தெளிவாகத் தெரிய வரும்.

 

தலைமைக்  கழகத்திலிருந்து நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் தாங்கள் பங்கேற்கும் ஊராட்சி சபை கூட்டங்களுக்கு முன்பாக ஊராட்சி செயலாளரை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து, அவரது கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். அதுபோலவே, ஊராட்சியில் உள்ள மூத்த பிரமுகர்கள்-அனுபவம் வாய்ந்த பொதுமக்கள் ஆகியோரையும் நேரில் சந்தித்து அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றிட வேண்டும்.

 

இது உங்களுக்கான அன்பு அறிவுரை மட்டுமல்ல. தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் உங்களில் ஒருவனான எனக்கும் இது மிகவும் பொருந்தும். அதனால்தான், ஊராட்சி சபை கூட்டம் தொடங்கப்பட்ட ஜனவரி 9ஆம் நாள் திருவாரூர் புலிவலத்தில் பொதுமக்களைச் சந்தித்ததுடன், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகளையும் சந்தித்து அளவளாவினேன். அதுமட்டுமின்றி, ஊராட்சிகள் தோறும் கழகம் அமைத்துள்ள பூத் கமிட்டியின் உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அவர்களின் கருத்துகளையும் செயல்பாடுகளையும் கேட்டறிந்து, அவற்றை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் யோசனைகளை வழங்கினேன். 

 

கழகத்தின் தொகுதிப்  பொறுப்பாளர்கள் இத்தகைய ஆலோசனைகளைக் கட்டாயம் நடத்திட வேண்டும். ஊராட்சிகள் தோறும் பூத் கமிட்டி என்பது ஒரு மாபெரும் பணி. அதனைச் செவ்வனே செய்வதற்கு கழகம் போன்ற மகத்தான இயக்கத்தால்தான் முடியும். பூத் கமிட்டிக் கூட்டம் நடக்கும்போது, அதில் இடம்பெற்றிருப்பவர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்களா என்பதை அவர்களைப் பெயர் சொல்லி அழைத்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்து உறுப்பினர்போல இயல்பான-இனிமையான பழகுதலுடன் ஆலோசனைகள் நடத்தப்படவேண்டும். இதில் எவ்வித சுணக்கமும் இல்லாமல் செயலாற்றும்போதுதான் அடிக்கட்டுமானம் பலப்படும். அதுதான் வெற்றிக் கோட்டையைக் கட்டுவதற்கு உறுதியையும் உத்தரவாதத்தையும் அளிக்கும்.

 

ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகக் களத்தில் முக்கியமானவை. தங்கள் பொன்னான வாக்குகளை கழகத்திற்கு அளிக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகிவிட்ட நிலையில், அவர்களை நேரில் சந்தித்து, வாக்குகள் சிதறாமல் சேகரிக்கின்ற பணியைத் தொய்வின்றித் தொடரவேண்டியது நமது பெருங்கடமை. 

 

தலைமைக் கழகம் வகுத்துத்  தந்த அட்டவணைப்படி, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர் கழக நிர்வாகிகள் பங்கேற்புடனும் ஆலோசனையுடனும் அனைத்து ஊராட்சிகளிலும் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. எங்கெங்கு ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் புதிய  கொடிக்கம்பம் நடப்பட்டு, அதில் தி.மு.கழகத்தின் கறுப்பு-சிவப்பு இருவண்ணக் கொடி ஏற்றப்பட வேண்டும். 12ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் பட்டொளி வீசும் இருவண்ணக் கொடி, உதயசூரியன் ஒளியில் மிளிரும். அதுவே ஆட்சி மாற்றத்துக்கு கட்டியம் கூறும் உயரமான சாட்சியாக அமையும்.
 

நல்லாட்சிக்கான  அடித்தளத்தை ஊராட்சி சபைக் கூட்டங்களின் வாயிலாகத் தொடங்கியுள்ளோம். மக்களின் பேராதரவுடன் கழக ஆட்சியை அமைப்போம்!

 

 

சார்ந்த செய்திகள்