நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இந்த புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி, பிரபாகரனைச் சந்தித்ததாகவும், இருவருக்கும் இருந்த தொடர்பு குறித்து அவ்வப்போது சீமான் பல்வேறு தகவல்களைத் தெரிவித்து வருகிறார். இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.
அதே சமயம் சீமான் பிரபாகரனைச் சந்திக்கவில்லை என்றும், அவர் சொல்வது பொய் என்றும் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதோடு சீமான் பிரபாகரனுடன் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படும் புகைப்படமும் எடிட்டிங் செய்யப்பட்டது என்று கூறி வருகின்றனர். மேலும், சிலரோ சீமான், பிரபாகரனைச் சந்தித்துப் பேசியது 10 நிமிடங்கள் தான். இப்படி இருக்கையில் சீமான் சொல்வதெல்லாம் எப்படி நடந்திருக்கும்? எனத் தொடர்ந்து கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சீமான் தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், “இவர் (சீமான் பெயரைக் குறிப்பிடாமல்), அவரைச் சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால், அந்தப் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்” எனக் குறிப்பிட்டிருந்தார். இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனியார் செய்தி ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் சீமான் பெயரை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விழுப்புரத்தில் சீமான் இன்று (21.01.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “பிரபாகரன் உடன் இருக்கும் உங்களின் புகைப்படம் ஒன்று எடிட் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்குச் சீமான், “அத விடுங்க” என மழுப்பலாகப் பதிலளித்தார்.