Skip to main content

இ.பி.எஸ். பேச்சும்; அமைச்சர் தங்கம் தென்னரசுவின் ரியாக்‌ஷனும்! 

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Minister thangam thennarasu comment on Edappadi palanisamy

 

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவிருக்கிறது. தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிமனையில் 10ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஈரோட்டில் நடந்த அ.தி.மு.க.வின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பரப்புரை என்ற பெயரில்  பச்சை பொய்களை அவிழ்த்து விட்டிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் முடிவுகளை நன்றாக அறிந்து கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமியின் உள்மனம் தோல்வி பயத்திலே துவளத் துவங்கி அந்த தோல்வி பயம் என்பது பொய்களை மக்கள் மனதில் விஷ விதைகளாக விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதே அவரது பேச்சு எடுத்துக்காட்டியுள்ளது. 

 

10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி, அதில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த நான்காண்டு கால ஆட்சி எந்தவிதமான சாதனைகளையும் செய்து முடிக்கவில்லை. இப்படி இருக்கையில் இங்கு நின்று கொண்டு பொய்யும், புனை சுருட்டுகளையும் மக்கள் மனதில் பரப்பி விடுகிறார். அவரது இந்த செயல் கேலி கூத்தானவை. முதல்வராக இருந்த காலத்தில் தமிழ்நாடு மக்களுக்காக எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சரவை சகாக்களும் அவரது இயக்கத்தினரும் செய்துள்ள துரோகங்களை பட்டியலிட்டு சொன்னால் நீண்டு கொண்டே போகும். டெல்லி பட்டணத்திலே பா.ஜ.க.வினரிடத்திலும், பிரதமர் மோடியிடத்திலும் தங்களை மட்டும் அல்ல அ.தி.மு.க.வில் அவர்களுக்கு முன்னால் இருந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் காப்பாற்றி வைத்திருந்த இயக்கத்தையே அடிமை சாசனமாக எழுதி வைத்து, அவர்கள் என்ன சொன்னாலும் செய்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்தவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி.

 

நீட் தேர்வு விவகாரத்தில் என்ன நடந்தது என நாடே அறியும். உதய் மின் திட்டத்தில் முதல்வராக ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அதனை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அவர் இறப்புக்கு பிறகு அன்றைய மின்சாரத்துறை அமைச்சரும் அவரது அமைச்சரவையும் ஒப்புக்கொண்டு, தமிழகத்தை உதய் மின் திட்டத்தில் இணைத்தனர். இதன் விளைவாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்பட்ட கேடுகளை நாம் அறிந்ததே. காவிரி பிரச்சனையில் மேகதாதுவில் அணை கட்டுவதில் ஒரு எதிர்ப்பினை கூட காட்டாமல் இணக்கமான சூழலை காட்டினர். காவிரி மேலாண்மை வாரியமா? ஆணையமா? என்கிற குழப்பத்தில் தமிழ்நாடு விவசாய குடும்பங்களுக்கு துரோகம் செய்தார்கள். குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்கள் மீது அடக்கு முறையை கட்டவிழித்து விடுவோம் என கூறியது எடப்பாடி பழனிசாமி ஆட்சி தான். அதேபோல ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை முற்றிலுமாக ஆதரித்த ஆட்சியும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தான். தமிழ்நாடு மக்களுக்கான எல்லா விதமான இழி நிலைகளையும் உருவாக்கிய ஆட்சியின் தலைவராகத் தான் எடப்பாடி பழனிசாமி இருந்துள்ளார்.

 

ஊழலை பற்றி பேசுகிறார்கள். அவர்களுக்கு அதில் என்ன அடிப்படை நியாயம் இருக்கிறது. அவரது ஆட்சிக்காலத்தில் எந்தெந்த துறைகளில் எல்லாம் ஊழல் நடந்தது. கலக்‌ஷன், கரப்ஷன், கமிஷன் என்கிற வகையில் இருந்ததால் தான் அந்த ஆட்சி வீட்டிற்கு அனுப்பப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையில் ஒவ்வொரு மாவட்டமும் எப்படி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதையெல்லாம் நாட்டு மக்கள் நன்றாக அறிந்துள்ளனர். குட்கா, போதை பொருளை பற்றி எடப்பாடி பேசுகிறார். ருத்ராட்சை அணிந்த பூனைகள் என்பது தான் நினைவுக்கு வருகிறது. அவர்கள் இப்போது தி.மு.க. ஆட்சி குறித்து பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக நடந்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்டெர்லைட் பிரச்சனையில் 8 பேரை சுட்டுக்கொன்ற போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் என கேட்டபோது, ‘நான் டி.வி.யை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்’ என கூறியதில் இருந்து அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்திருந்தது. 

 

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர சம்பவங்களை மூடி மறைக்க முயன்றதை, மனசாட்சியோடு அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஊழலின் மொத்த உறைவிடமாக, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகங்கள் செய்வதில் முதன்மை இடமாக, நம் நலன்களை அடகு வைப்பதில் ஆர்வம் காட்டுபவர்களாக அ.தி.மு.க.வினர் இருந்துவிட்டு, தற்போது ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு கேட்டு வந்திருப்பதும் அதில் தி.மு.க.வினை நோக்கி சேற்றினை வாரி வீச முற்பட்டிருப்பதும் எள்ளி நகையாட கூடியது. நீங்கள் எத்தனை முகமூடிகளை போட்டுக்கொண்டு ஈரோடு தேர்தல் களத்திற்கு வந்தாலும், ஈரோடு பூகம்பத்தில் அ.தி.மு.க. இருக்கிற இடம் தெரியாமல் மறையும் என்பது உறுதி. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக களம் காணக்கூடிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்று அ.தி.மு.க.விற்கு தக்க பாடத்தை ஈரோடு கிழக்கு தேர்தல் களம் புகட்டும்.

 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 20 அமைச்சர்கள் வந்துள்ளோம் என்கிறார்கள். அதிமுக ஆட்சியில் அப்போது நடந்த இடைத்தேர்தலான நாங்குநேரி, ஆர்.கே. நகர் தேர்தல்களில் அ.தி.மு.க. அமைச்சர்கள் அங்கு வராமல் இருந்தனரா? இப்படி அ.தி.மு.க.வினர் சொல்லி மக்களை திசை திருப்ப முயல்கின்றனர். எல்லா தவறுகளையும் எல்லா குற்றங்களையும் அவர்களது ஆட்சியில் செய்துள்ளார்கள். பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதைப் போல எங்கள் மீது பழி சுமத்த நினைக்கின்றனர். 

 

ஈரோடு கிழக்கு தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சாதனை திட்டங்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த ஈரோடு மேம்பாலத்தில் பல பிரச்சனை இருப்பதாக மக்கள் எங்களிடம் குற்றம்சாட்டியுள்ளனர். அந்த ஆட்சியின் திட்டங்களை நாங்கள் முடக்கவில்லை. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் அடிப்படையில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யவில்லை. அதனால் தான் அத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது. இதற்கு முழு பொறுப்பும் அ.தி.மு.க. அரசு தான். ஈரோடு கிழக்கு தொகுதி மேம்பாட்டு பணிக்கு முதற்கட்டமாக ரூ. 300 கோடியும் அதன்பின் ரூ. 454 கோடியையும் முதல்வர் ஒதுக்கி தந்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகளின் காரணமாக, தேர்தல் முடிந்ததும் அப்பணிகள் விரைவில் துவக்கப்படும்.

 

தி.மு.க. ஆட்சியில் புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, இல்லம் தேடி மருத்துவம், காலை சிற்றுண்டி திட்டம் போன்ற பல்வேறு மகத்தான புதிய திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதி எவ்வளவு நிறைவேற்றப்பட்டுள்ளது எனபது குறித்து தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களது தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றாத திட்டங்கள் குறித்து சட்டமன்றத்தில் எடுத்து காட்டியுள்ளோம்.

 

தமிழகத்தில் தி.மு.க. 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு 2022-2023 நிதியாண்டில் தமிழ்நாட்டில் நிகர சந்தை கடன் 57 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 12 ஆயிரத்து 28 கோடியாக குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 28 ஆயிரம் கோடியாக நிகர சந்தை கடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. மாநில நிதி பற்றாக்குறை 2021ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி 28 ஆயிரம் 108 கோடி இருந்தது. 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆயிரத்து 931.10 கோடியாக குறைந்துள்ளது. மாநில வருவாய் பற்றாக்குறை 2021ல் அக்டோபர் மாதம்.10 ஆயிரத்து 126.14 கோடியாக இருந்தது. 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆயிரத்து 654.91 கோடியாக குறைந்துள்ளது. எனவே, நல்ல நிதி நிர்வாகத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 

 

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதி பொறுப்புடைமை சட்டத்தை மீறியே கடன் வாங்கியுள்ளனர். நிர்வாகத்தை சீரமைக்க முடியாமல் 2.63 லட்சம் கடன் சுமையை வைத்துவிட்டு சென்றுள்ளேன் என எடப்பாடி பழனிசாமி தைரியமாக கூறுகிறார். இது முன்னாள் முதல்வருக்கு அழகா?.

 

பேகசஸ் என்ற பெயரில் கிரேக்க குதிரையின் வடிவில் சின்னம் வைத்தார்களே... அது கட்சியின் நிதியில் வைத்தார்களா? என கூறட்டும். அதன்பின் பேனா சின்னம் குறித்து சொல்கிறேன். தி.மு.க.விற்கு தோல்வி பயம் எந்த காலத்திலும் கிடையாது. நாங்கள் மாபெரும் வெற்றியை பெறுவோம். ஜனநாயக முறையில் கூட்டணி கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார். கூட்டணி தர்மத்தை மதித்து அவருக்கு ஆதரவாக தேர்தல் பணியை செய்கிறோம். நாங்கள் அ.தி.மு.க.வை போல கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதியை பறித்துக் கொள்ளவில்லை” என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்