சென்னை பல்லாவரம் அருகே மலைமேடு பகுதியில் வசித்துக் கொண்டிருக்கும் மக்கள் நேற்று (04-12-24) தண்ணீர் அருந்தியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்டோர், தனியார் மருத்துவமனையில் 6க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 32 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்ததாகவும், அந்த தண்ணீரைப் பருகியதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இதில் திருவேதி மற்றும் மோகனரங்கம் ஆகிய 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், மாநகராட்சி அதிகாரிகள் மாதிரி நீரைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திருவேதி மற்றும் மோகனரங்கம் ஆகிய இரண்டு பேரையும் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டிருக்குமா? என்ற சந்தேகத்தின் பேரில் குடிநீரின் மாதிரியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 88 வயதான வரலட்சுமி என்பவர் ஏற்கெனவே பல நாட்களாக படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். அவரும் இறந்திருக்கிறார் என்ற செய்தியும் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, 3 பேரின் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும்.
நம்முடைய எதிர்க்கட்சி தலைவர், எந்த விஷயத்தை எடுத்தாலும், ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் செய்திகளை சொல்வதும், தொடர்ந்து பதற்ற சூழலை உருவாக்குவதுமான செய்திகளை பதிவிடும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது கூட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், 3 பேர் உயிரழந்திருப்பதாகவும் சொல்லிருக்கிறார். ஆனால், சிகிச்சைக்காக 19 பேர் மட்டுமே மருத்துவமனையில் இருக்கிறார்கள். இறந்தவர்களில் இரண்டு பேர், உயிரிழந்த நிலையில் தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ள படுத்த படுக்கையாக இருந்த ஒருவர் இறந்திருக்கிறார். இருந்தாலும், இன்னும் இரண்டொரு நாட்களில் பிரேத பரிசோதனை முடிவிலும், குடிநீர் மாதிரி ஆய்வு முடிவிலும் அவர்கள் இறந்ததற்கான காரணம் தெரியவரும்” என்று கூறினார்.