கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டப்போவதாக அம்மாநில அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகள் எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், இன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, மேகதாது அணை விவகாரத்தில் கண்டனம் தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மேகதாது அணை கட்டக்கூடாது என தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான கர்நாடக அமைச்சரின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது ஆகும்.
மேகேதாட்டு அணையை கட்டக்கூடாது என்று தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் ஒப்புதலின்றி அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்று மத்திய அரசு கூறிவிட்டது. அதன்பிறகும் கர்நாடகம் பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு உள்ளிட்ட எதையும் மதிக்காமல் மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அமைச்சர் பொம்மை தொடர்ந்து பேசி வருவது அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களிடை உறவு தத்துவத்திற்கு எதிரானது.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கர்நாடக அமைச்சர்களின் பேச்சுகளை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிப்பதுடன், அரசியலமைப்புச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.