நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சியில் போட்டியிடுகிறார். சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (27.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடுகையில், “பொதுச்சின்னங்கள் பட்டியலில் இல்லாத பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு வழங்க சட்டவிதிகள் இல்லை. ஒரே மாநிலத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் வைகோ தரப்பில் வாதிடுகையில், “வேறு மாநிலத்தில் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இந்த வழக்கிற்கு தீர்வு காண இயலாது. கடந்த 2010ஆம் ஆண்டு ம.தி.மு.க. அங்கீகாரத்தை இழந்துவிட்டது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தின் படி ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை வழங்க முடியாது. எனவே ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது’ எனத் தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
இந்நிலையில் தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னம் ஒதுக்க திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ம.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்காமல் மாநில கட்சியாக உள்ள ம.தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ம.தி.மு.க. மாநிலக் கட்சியாக இருப்பதால் கேட்கும் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ம.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது. மார்ச் 30 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளது. அப்போது ம.தி.மு.க.விற்கு ஒதுக்கப்படும் சின்னம் குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.