மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. இடம்பெறும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எஸ்.பி.வேலுமணி,
பொள்ளாச்சி தொகுதிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். தென்னை விவசாயிகள் கூடுதல் லாபம் அடையும் வகையில் தென்னை நீராபானம் இறக்க அனுமதி வழங்கி உள்ளார். ஆனைமலை ஆறு, நல்லாறு பாசனத்திட்டம் நிறைவேற்ற ஓய்வு பெற்ற பொறியாளர்கள் தலைமையில் ஆய்வுக்குழு நியமித்து முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
10 வருடங்களாக கட்சியில் இல்லாதவர் டி.டி.வி. தினகரன். பாராளுமன்றத்திற்கே போகக்கூடாது என்று ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர் தான் டி.டி.வி. தினகரன். இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை அ.தி.மு.க. பக்கம் தான் தொண்டர்கள் இருப்பார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் அ.தி.மு.க. தயவால் தான் ஆட்சி அமைக்க முடியும். மந்திரி சபையிலும் அ.தி.மு.க. இடம்பெறும். இவ்வாறு பேசினார்.