நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வீர் சிங்-ஐ பணி இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் வரும் ஏப்ரல் 3ம் தேதி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த விவகாரத்தில், கல்லிடைக்குறிச்சி காவலர் ராஜ்குமார் மற்றும் விக்கிரமசிங்கபுரம் காவலர் போகபூமன் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அம்பாசமுத்திர அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நமக்குத் தேவை எல்லாம் இவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பது தான். குற்றம் செய்தவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும். இவைதான் நாம் எதிர்பார்ப்பது. உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று முழு பரிசோதனை செய்யச் சொல்லியுள்ளேன். அடுத்தபடியாக இவர்களுக்கு என்ன நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்யும். அப்படி அரசு முடிவு செய்யவில்லை என்றால் கண்டிப்பாக எதிர்க்கட்சி என்ற முறையிலும் மக்களின் பிரதிநிதி என்பதன் முறையிலும் கண்டிப்பாகச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வேன். மற்றவர்களைப் போல் இதை அரசியல் ஆக்க விரும்பவில்லை” எனக் கூறினார்.