Skip to main content

புதிய எம்.பி.க்களை சந்திக்க மறுக்கும் ராகுல்... லாலு, சரத்பவார் அட்வைஸ்...

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

 


காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க கடந்த 25ஆம் தேதி காங்கிரஸின் காரியக் கமிட்டி டெல்லியில் கூடியது. அதில் சிறப்பு அழைப்பாளரா கலந்துக்கிட்ட பிரியங்கா காந்தி, நானும் ராகுலும் கடுமையா பிரச்சாரம் செய்தோம். ஆனால் சீனியர் தலைவர்கள் யாரும் இது போன்ற அக்கறையைக் காட்டலை. பா.ஜ.க. நம் மீது வைத்த புகார்களுக்கும் கூட நம் தலைவர்கள் பதில் சொல்ல வாயைத் திறக்கலைன்னு ஆவேசமாக பேசியிருக்கிறார். 


 

 

rahul


 

அதேபோல் மன வேதனையோடு பேசிய ராகுலும், கட்சிக்கு உழைப்பதைவிட, நம் சீனியர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சீட் வாங்கறதிலேயே குறியா இருந்தாங்க. வலியுறுத்தியும் மிரட்டியும் சீட் வாங்கினாங்கன்னு ப.சிதம்பரம், கமல்நாத் உள்ளிட்ட தலைவர்களைப் பற்றி சுட்டிக் காட்டியதோடு, தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்றேன்னு ரிசைன் லெட்டரையும் எடுத்து நீட்டினார். 
 

ஆனால் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்தான், "உங்கள் முடிவு பெருந்தன்மையைக் காட்டினாலும், நீங்க இப்படியொரு முடிவை எடுக்கத் தேவையில்லை. இந்த நேரத்தில் கட்சியை வழிநடத்திச் செல்ல உங்களால்தான் முடியும்'ன்னு சொல்லி, ராகுலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்துட்டார். 
 

இதனிடையே ராஜினாமா செய்யும் முடிவை கைவிடுங்கள் என்று ராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும், மக்களின் மனங்களில் நீங்கள் இருக்குறீங்க. எனவே, தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணத்தை விட்டு விடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். உடனே ராகுல் தமிழகத்தில் திமுக கூட்டணி  அடைந்திருக்கும் இந்த மாபெரும் வெற்றிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியும் தேர்தல்  வெற்றிக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
 

லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில், ராகுலின் பதவி விலகல் முடிவானது காங்கிரஸ்க்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கும் தற்கொலை முடிவாக அமையும். பாஜகவின் பொறியில் ராகுல் விழுந்துவிடக்கூடாது. காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவரை காங்கிரஸ் தலைவராக்கினால் அவரை பொம்மை தலைவராகத்தான் விமர்சிப்பார்கள். அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு அந்த வாய்ப்பை ராகுல் ஏன் தர வேண்டும் என்று கூறியுள்ளார். 


 

 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களைக் கூட சந்திப்பதில்லை என மறுத்து வரும் ராகுல்காந்தி, பிரபல தலைவர்களை மட்டுமே சந்தித்து வருகிறார். அந்த வகையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் ராகுல்காந்தி சந்தித்துப் பேசியுள்ளார். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது. சரத்பவாரும் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பு பற்றி பலவிதமான யூகங்கள் எழுந்துள்ளன. அதாவது காங்கிரஸ் கட்சியில் இருந்த சரத்பவார் கடந்த 1999ல் அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸை தொடங்கினார். இதனால் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் இணைய வாய்ப்பு உள்ளது என்றும், கட்சித் தலைவராக ராகுல் இருக்க விரும்பாததால் சரத்பவாரை தலைவராகலாம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 

இந்த நிலையில் விரைவில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழு கூட இருக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியில் சில மாற்றங்களை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்