Skip to main content

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் பாடுபடும்! -தினேஷ் குண்டுராவ் அறிக்கை

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

Dinesh Gundu Rao

 

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் கட்சி பாடுபடும் என்று, அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் கட்சி பாடுபடும்.

 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட எங்கள் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

 

மக்களவைத் தேர்தலுக்கு முன்பே, ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என முதன்முதலாக மு.க.ஸ்டாலின் அறிவித்ததை, நாங்கள் நன்றியுணர்வுடன் நினைவில் கொண்டுள்ளோம்.

 

இத்தகைய அறிவிப்பால் கவரப்பட்ட தமிழக மக்கள், மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில், 39 தொகுதிகளில் தி.மு.க தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்தனர்.

 

Ad

 

அதேபோன்று, மு.க.ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக வேண்டும் என்ற ராகுல்காந்தியின் கனவை நிஜமாக்கும் வகையில், வரும் தேர்தலை தி.மு.க.வுடன் காங்கிரஸ் இணைந்து சந்திக்கும்.

 

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை இதுதான், என்பதை நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். வியாழக்கிழமை காலை சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நான் தெரிவித்த கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால், இந்த விளக்கத்தை அளிக்கின்றேன். தயவு செய்து இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்''. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்