நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்த நேர்காணலும், அதனைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனையும் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டன.
அதிமுக முக்கிய விஐபிக்கள் பலரும், 'தங்களுக்கே சீட் கொடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், முக்கிய பிரச்சனை ஒன்று வெடித்திருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுகவினர், "வேட்பாளர் நேர்காணல் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி கலந்து கொள்ளவில்லை. பொதுவாக, அதிமுகவில் நடக்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்திலும் கலந்துகொண்டு தனது முடிவினை அழுத்தமாக வலியுறுத்துவார் கே.பி.முனுசாமி. அவரது கருத்துக்கள் அனைவராலும் பரிசீலிக்கப்படும்.
அப்படி இருக்கையில் முக்கிய நிகழ்வாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி கலந்து கொள்ளாதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதியில் வேட்பாளர் தேர்வு குறித்து சில ஆலோசனைகளை தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியிருந்திருக்கிறார். ஆனால் அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் இந்தக் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார்.
அதே சமயம், தமிழகத்தில் பெரும்பாண்மை சமூகத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியின் விவிஐபிக்களை வளைக்கும் முயற்சியை அண்மைக் காலமாக பாஜக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கே.பி.முனுசாமியை பாஜக வளைத்துவிட்டதோ என்கிற சந்தேகம் இருக்கிறது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்த கூட்டத்தை கே.பி.முனுசாமி புறக்கணித்திருப்பதை தொடர்ந்து அவரை தொடர்பு கொண்டு விசாரிக்க அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் முயற்சித்தனர். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.