தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருக்கும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் முதல்வரின் நிவாரண நிதிக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். மேலும், இதற்காகச் செலுத்தப்படும் நிதி அனைத்தும் கரோனா நிவாரணத்திற்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்றும், அதன் கணக்கு வழக்குகள் யாவும் வெளிப்படைத்தன்மையாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணியும், தற்போது உள்ள ஐந்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது ஒருமாத சம்பளத்தை முதல்வரின் நிவாரண நிதிக்குத் தருவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குத் தாராளமாக நன்கொடை வழங்கும்படி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதையேற்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அதன் மாநிலங்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் தங்களின் ஒருமாத ஊதியத்தை நன்கொடையாக வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக திரட்டப்படும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வசதி படைத்த அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று, முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி மூவரும் இணைந்து ஒரு கோடி ரூபாயை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சிகளில் பாமக முதல் கட்சியாக தனது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.