ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகின்றார். இதனையொட்டி திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதேபோன்று அதிமுக சார்பாக பழனிசாமி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோட்டில் நேற்று பாஜக சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கலந்துகொண்டார். பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையில், " ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா அல்லது அதிமுகவில் உள்ள இரு அணிகளில் எந்த அணிக்கு ஆதரவு அளிப்பது என்பதை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இன்னும் இரு தினங்களில் அறிவிப்பார். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் செய்யும் ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் அங்கீகாரத்தை தேடிக் கொள்வார்கள்.
எனவே இந்த இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். அதிமுகவின் இரு அணியும் ஒன்று சேர வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு ஆகும். இரு அணிகளையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடாது. அவர்களின் கட்சி விஷயங்களில் தலையிட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. திமுகவிற்கு எதிராக மக்கள் உள்ளனர். எனவே பாஜக முன்னணியில் இருக்க வேண்டும் என்று மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஓ. பன்னீர்செல்வம் எங்களுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம்.
திமுகவை வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒரே அணியில் இருந்து அவர்களை எதிர்க்க வேண்டும். பாஜக தேர்தலில் போட்டியிட்டால் திமுகவின் ஊழலை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்போம். திமுக கூட்டணிக் கட்சிகளை வீழ்த்த பாஜகவால் மட்டுமே முடியும். இந்த தேர்தலில் பாமக போட்டியிடாதது அவர்களது தனி கருத்து. இருந்தாலும் பாமக இன்னும் தேசிய கட்சியில் எங்கள் கூட்டணியில் தான் உள்ளது" என்றார்.