அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதியில் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி போட்டியிடுகிறார். அவரின் அறிமுக கூட்டம் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “இந்த தேர்தல், திராவிட கட்சிகளின் மூத்த தலைவர்கள் இல்லாத முதல் தேர்தல். அதிமுக ஜனநாயக கட்சி. இங்கு குடும்ப அரசியலுக்கு அனுமதி இல்லை. கலைஞர் மகன் என்பதாலேயே திமுகவை ஸ்டாலின் அபகரித்துக்கொண்டார்.
அதிமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வரலாறு உண்டு. இந்த தேர்தல் உண்மைக்கும் பொய்க்கும் நடக்கும் மகா யுத்தம். ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் பொய் பேசி வருகிறார். விவசாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி என அறிவித்த எடப்பாடி பழனிசாமி அதற்கான ரசீதையும் கொடுத்தார் என்றால் அவர் விவசாயி. அதிமுக அரசு தள்ளுபடி செய்த விவசாயிகளின் கடனை ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததால் தள்ளுபடி செய்கிறேன் என்கிறார். இது யாரை ஏமாற்றம் வேலை” என்று பேசினார்.