தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 14 காங்கிரஸ் உறுப்பினர்களையும் 3 தி.மு.க. உறுப்பினர்களையும் கொண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.
சில மாதங்களாகவே காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவிவருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்று (18.01.2021) நடைபெற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்திலும் தி.மு.க. பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று நடைபெற்ற தி.மு.க.வின் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், “புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறாவிடில் மேடையிலே தற்கொலை செய்துகொள்வேன். புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியை திமுக தலைவர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார். புதுச்சேரியில் திமுக ஆட்சி வந்தவுடன் அனைவரும் திரும்பிப் பார்க்கும் அளவில் மாற்றம் இருக்கும். புதுச்சேரியில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்” எனத் தெரிவித்தார்.