ஜெயாநகர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றிபெற்றுள்ளார்.
கர்நாடக மாநிலத்திற்கான சட்டசபைத் தேர்தல் கடந்த மே 12ஆம் தேதி நடந்துமுடிந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ஜெயாநகர் தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 11ஆம் தேதி ஜெயாநகர் தொகுதிக்கான தேர்தல் நடந்துமுடிந்தது. காங்கிரஸ் சார்பில் ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியா ரெட்டியும், பா.ஜ.க. சார்பில் பி.என்.பிரஹலாதாவும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகின. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், 53,411 வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றிபெற்றார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிரஹலாதாவை 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்தத் தொகுதிக்கான தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி தமது வேட்பாளரை நிறுத்தாமல் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவை தெரிவித்தது.
முன்னதாக, ராஜராஜேஸ்வரி நகரில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முனிரத்னா வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் மதஜ, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களைக் களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.