கந்து வட்டி கொடுமைகளை பத்தி சினிமாவில் ‘கனா கண்டேன், தடையறத் தாக்க’ ஆகிய திரைப்படங்களில் கந்துவட்டியின் உக்கிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி இருப்பார்கள். அதே சினிமா நடிகர்களே கந்துவட்டி கொடூரர்களாக வலம் வருவது இன்னும் கொடுமையான விசயம்.
கந்துவட்டி கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஜெ. அரசு கந்துவட்டிக்கு எதிராக குண்டர் சட்டம் கொண்டுவந்தது. ஆனாலும் தனிகாட்டு ராஜாவாகவும், அடிதடி ரவுடிகளின் துணையோடு வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
சினிமா நடிகர் அலெக்ஸ் ஒரு காலத்தில் திருச்சி ரயில்வே தொழிலாளர்களுக்கு வட்டி கொடுக்கும் தொழில் நடத்தி வந்தாலும், அவர் கால போக்கில் மாஜிக் கலைஞராக மாறி உலக புகழ்பெற்று மறைந்தார்.
அதன் பிறகு அவருடைய மருமகன் ஜெரால்டு மில்டன் அதிமுக கட்சியில் இணைந்து அதிமுக கவுன்சிலராக மாறி அந்த அரசியல் பலத்துடன் தொடர்ச்சியாக கந்துவட்டி கொடுமை, டார்ச்சர் குறித்து புகார் வந்து வழக்கு பதிவு செய்தாலும் தன்னுடைய உச்சகட்ட சினிமா, ரவுடிகளின் பலத்தில் தொடர்ச்சியாக இந்த தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்.
உச்சகட்டமாக கடந்த 2012ம் ஆண்டு திருவரம்பூரில் உள்ள காந்திநகரில் வசித்த ராகுல் என்கிற பெயரில் மினரல்வாட்டர் கம்பெனி நடத்திய சரவணன் என்பவர் "வாங்கினது நாங்க அஞ்சு லட்சம்தான்.... இன்னிக்கி 25 லட்ச ரூபாய் என்னை கட்டு..கட்டு... கட்டு... கட்டு... கட்டு... கட்டு... கட்டுனு டார்ச்சர் பண்ண, தன்னுடைய காரில் தற்கொலை செய்து கொண்டு இதற்கு காரணம் நடிகர் ஜெரால்டு மில்டன் என்று லைவ் வீடியோ வெளிட்டது தமிழகத்தையே உலுக்கியது அந்த வீடியோ. அந்த வழக்கில் தன்னுடைய அதிகாரபலத்துடன் ஈசியா வெளியே வந்தார்.
இதன் பிறகு சினிமாவில் பாண்டவர் அணியில் நடிகர் விஷாலுடன் இணைந்து சினிமாவுக்குள் விஷாலுக்கு மிக நெருக்கமான நபராக மாறி சினிமாவில் பல படங்களுக்கு வட்டி தொழில் மூலம் சிறப்பாக வலம் வருகிறார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வட்டி டார்ச்சர், கடத்தல், அடிதடி வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளார்.
இது குறித்து புகார் கொடுத்த ஆறுமுகத்திடம் பேசியபோது, ''திருச்சி கொட்டப்பட்டு ஐஸ்வர்யா நகர் எங்க ஏரியா. ரயில்வே தொழிலாளியான எனக்கு உடல் நிலை சரியில்லை. பைபாஸ் சர்ஜரி பண்ண பணத் தேவை இருந்ததால் குறைந்த வட்டி என்று என்னை கூட்டிக்கொண்டு போய் அதிமுகவின் முன்னாள் கவுன்சிலரும், நடிகருமான ஜெரால்டிடம் விட்டார்கள். நான் கடந்த 2019ஆம் ஆண்டு 35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். வாங்கும் போது தான் தெரிந்தது 10 ரூபாய் வட்டி, கூட்டு வட்டி, பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள். அப்போதே எனக்கு கொஞ்சம் யோசனையாக தான் இருந்தது.
நான் தொடர்ந்து வட்டி கட்டி வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக இருந்தால் என்னால் வட்டி கொடுக்க முடியவில்லை. அவர்களிடம் எங்க பணிமனையில் 160க்கு பேருக்கு மேல் வாங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் இது பற்றி விசாரித்த போது அவர்கள் சொன்ன கதைகளை கேட்டு மிரட்டு போயிட்டேன்.
இந்நிலையில் நான் பொன்மலையில் கடந்த சனிக்கிழமை வேலையை விட்டு வெளியே வந்த போது 3 பேர் கொண்ட கும்பல் டூவிலரில் அசிங்கமாக திட்டி கட்டாயப்பத்தி கடத்தி சென்று திருச்சி தென்னுர் பகுதியில் ஜெரால்டுக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் அடைத்து வைத்து வட்டியுடன் சேர்த்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணம் திரும்பி தர கேட்டு சரமாரியாக தாக்கினார்கள். (இந்த அலுவலகம் தான் வட்டி வசூல் செய்யும் அலுவலகம் என்பது குறிப்பிடதக்கது).
எனக்கு உடல்நிலை மோசமான நிலையில் இருந்தும் அவர்கள் அதை கண்டு கொள்ளாமல் என்னை அடிப்பதிலேயே குறியாக இருந்தார்கள். கடைசியில் அவர்களிடம் நீங்கள் கேட்கும் பணத்தை ரெடி பண்ணி தருகிறேன் என்று கெஞ்சி காலில் விழுந்து 20ம் தேதிக்குள் பணத்தை தருவதாக சொல்லி தப்பித்து கம்யுனிஸ்டு கட்சி துணையுடன் இந்த விவகாரம் குறித்து பொன்மலை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசிடம் புகார் கொடுத்தேன். அதன் பிறகு வழக்கு பதிந்துள்ளனர். எனக்கு இப்போ உயிர் பயம் உள்ளது'' என்கிறார்.
இந்த பிரச்சனை குறித்து சி.பி.எம். கட்சியின் பொன்மலை பகுதி செயலாளர் கார்த்தியிடம் பேசினோம். ''இந்த கந்து வட்டி கடத்தல் குறித்த புகாரில் தற்போது பொன்மலை இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசுக்கு பிரஷர் வந்து எதற்கும் பயப்படாமல் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த பொன்மலை பணிமனையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கந்துவட்டி கொடுமையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் எல்லாம் வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது குறித்து தமிழக அரசு தலையிட்டு சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் எங்கள் அமைப்பின் மூலம் இந்த கந்துவட்டி தொழிலில் பாதிக்கப்பட்டவர்களை திரட்டி புகார் கொடுக்க உள்ளோம்.
புகாரின் பேரில் நடிகர் ஜெரால்டுமில்டன், மரியம் நகரை சேர்ந்த ஜெஸ்டின் ஜெயராஜ், பாலக்கரை விசு ஆகியோர் மீது வழக்கு பதிந்து முதல் கட்ட நடவடிக்கையாக ஜெஸ்டின் ஜெபராஜ் கைது செய்யப்பட்டு உள்ளார். வழக்கு பதிந்தவுடன் வழக்கம் போல் தலைமறைவாகியுள்ளார் நடிகர் ஜெரால்டுமில்டன்.
கைது செய்யப்பட்ட ஜெஸ்டின் ஜெபராஜ் சென்னையை சேர்ந்த நபர், இவர் சென்னையில் இதே போன்ற வழக்கில் சம்மந்தப்பட்டவர். நடிகர் ஜெரால்டுமில்டனிடம் பணியுரியும் கந்துவட்டி வசூல் கும்பல் பெரும்பாலும் வெளியூர் நபர்கள் என்பது குறிப்பிடதக்கது.
பெரும்பாலும் கந்துவட்டி பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வெளியே சொல்ல பயப்படுவார்கள். ஆறுமுகம் போன்ற சமூக அக்கறை உள்ளவர்கள் தைரியமாக வெளியே சொல்லும் போது காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.