பாஜகவில் ஷேம் சைடு கோல் போடுவதில் சுப்பிரமணிய சாமியை விட்டால் வேறு ஆளே இல்லை என்கிற அளவுக்கு சு.சாமியின் கருத்துகள் பாஜகவில் சுவாரஸ்யமாக பேசப்படுகின்றன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், கேபினெட் மந்திரியாகிவிட வேண்டும் என்பது சு.சாமியின் தீராத மோகம். அதுவும் நிதியமைச்சர் ஆக வேண்டும் என்பதில் அவருக்கு பேரார்வம். ஆனால், சாமியின் ஆசையை நிராசையாகவே வைத்துக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அவரை மத்திய அமைச்சராக்கினால் தனது தலைமையிலான அரசு என்னவாகும் என்பதை பிரதமர் மோடி உணர்ந்திருப்பதால்தான், சாமியை அமைச்சராக்குவதை தவிர்த்து வருகிறார் என்கின்றனர் பாஜகவினர்.
இந்த நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை நடத்தி முடித்ததும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கரோனா நோய் தொற்று குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, கரோனா தொற்று என்பது கடவுளின் சாபத்தால் வந்தது என தெரிவித்து விட்டார்.
நிர்மலா சீதாராமனின் இந்த கருத்தை கண்டிக்கும் வகையிலும், நக்கல் அடிக்கும் வகையிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி தந்தன. அதற்கு பதில் சொல்லமுடியாமல் தவித்தார் நிர்மலா சீதாராமன்.
இந்த நிலையில்தான், இது குறித்து கருத்து பதிந்துள்ள சு.சாமி, கரோனா தொற்று கடவுளின் சாபம் என்றால், தவறான முடிவுகளால் எடுக்கப்படும் பொருளாதார வீழ்ச்சியும் கடவுளின் சாபம் தானா? என கேள்வி எழுப்ப. அவரது கருத்துகள் வைரலானது.
அவரது கேள்வியில் உள்ள அர்த்தம் மிக வலிமையானது. என்றாலும், ஷேம் சைடு கோல் போடுவதா என பாஜகவிலேயே சாமிக்கு எதிராக விமர்சனங்கள் கச்சை கட்டுகின்றன!