வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடவுள்ள நிலையில், அதிமுக வட்டாரத்தில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய நிலையில், பொதுக்குழுவை நடத்தும் முடிவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கட்சிக்குள் நடந்த விவாதத்தில் யார் யார் என்ன என்ன பேசினார்கள் என்று நான் வெளியே சொன்னால்தான் தவறு. 95 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஒற்றைத்தலைமையே விரும்புகின்றனர். இது வெளிப்படைத்தன்மையான விஷயம். இது சாதாரண தொண்டருக்கும் தெரியவேண்டாமா? இது தெரியக்கூடாது என்று அண்ணன் ஓபிஎஸ் நினைக்கிறாரா? கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்கு அனைத்தும் தெரியவேண்டும்.
கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தவர்களை ஓபிஎஸ் தொடர்ந்து சந்திக்கிறார். அவர்களோடு எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று நீங்கள் அறிக்கை கொடுத்தீர்களே. ஒருங்கிணைப்பாளருக்கு அந்தச் சட்டம் பொருந்தாதா? ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டம், சாதாரண தொண்டர்களுக்கு ஒரு சட்டமா” எனக் கேள்வியெழுப்பினார்.