





ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார். ராகுல் காந்தியின் பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக எதிர்த்தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் ராகுல் காந்தியைக் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துகொள்ள அவருக்கு உடனடியாக பிணை வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புப்பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். அதேபோல் கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ராகுல் காந்திக்கு திட்டமிட்டே மத்திய அரசு நெருக்கடியை கொடுத்து வருகிறது என காங்கிரஸ் உறுப்பினர்கள் தரப்பில் கூறப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்யமூர்த்திபவனில் காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.